நடைபாதை உள்வாங்கிய விபத்து; விஜயலட்சுமியின் முகத்தையாவது காட்டுங்கள் -குடும்பத்தினர்

கோலாலம்பூர்:

மஸ்ஜிட் இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று நடைபாதை திடீரென உள்வாங்கியதில் ஏற்பட்ட ஆழ்குழிக்குள் தவறி விழுந்த இந்திய மாதுவான 48 வயது விஜயலட்சுமியைத் தேடும் பணிகள் தொடர்கின்றன.

நடைபாதை உள்வாங்கியதில் நிலத்துக்கு அடியில் உள்ள கழிவுநீர் குழாய்கள் ஓடும் பாதைகளில் இடிபாடுகள் குவிந்து கிடப்பதாகவும் தேடுதல், மீட்புப் பணிகளுக்கு அவை இடையூறு விளைவிப்பதாகவும் டாங் வாங்கி மாவட்டக் காவல்துறைத் தலைவரான துணை ஆணையர் சுலிஸ்மி சுலைமான் தெரிவித்தார்.

சக்திவாய்ந்த நீரோட்டம் காரணமாகப் பாதைகளும் கான்கிரீட் துண்டுகளும் மீட்புப் பணியாளர்களின் பாதையை மறித்துக்கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.

இதற்குத் தீர்வு காணும் வகையில் சக்திவாய்ந்த நீர் பாய்ச்சுக் கருவிகளைப் பயன்படுத்தி இடிபாடுகளைச் சிதறடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக சுலிஸ்மி தெரிவித்தார்.

“கழிவுநீர் குழாய்கள் ஓடும் பாதைகளை இடிபாடுகள் அடைத்துக்கொண்டிருப்பது கேமரா மூலம் தெரியவந்துள்ளது என்றும், இடிபாடுகளுக்குப் பின்னால் ஏதோ ஒன்று இருப்பதாக உணர்கிறோம் என்றும் கூறிய அவர், சக்திவாய்ந்த நீர் பாய்ச்சுக் கருவிகளைப் பயன்படுத்தி பாதைகளை மறித்துக்கொண்டிருக்கும் இடிபாடுகளைச் சிதறடித்துவிடலாம் என்றார்.

மழை பெய்தால் திறந்துகிடக்கும் எட்டு மீட்டர் ஆழ்குழி வாயிலாகச் செல்லும் மழைநீர் தேடுதல், மீட்புப் பணிகளுக்கு இடையூறு விளைவிக்காமல் இருக்க நிலத்துக்கு அடியில் உள்ள கழிவுநீர் குழாய்ப் பாதைகளைச் சுற்றி 100க்கும் அதிகமான மணல்மூட்டைகளை கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் போட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

பந்தாய் டாலாம் பகுதியில் உள்ள இன்டா கழிவு நீர் ஆலை அருகில் தேடுதல் பணிகள் தொடர்வதாக சுலிஸ்மி கூறினார்.

இந்நிலையில் ஆழ்குழிக்குள் விழுந்து மாயமான விஜயலட்சுமியின் குடும்பத்தாருக்குத் தேவையான உதவி வழங்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர்.

அவர்களுடன் எந்நேரமும் இருந்து அவர்களுக்கு உதவி புரிய மனநல ஆலோசகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

“ஆழ்குழிக்குள் விழந்த பெண்ணின் குடும்பத்தினர் கடுமையான மனவேதனையால் வாடி வதங்கியுள்ளனர். ஆனால் விஜயலட்சுமி உயிருடன் இல்லாததற்கான சாத்தியங்கள் அதிகம் என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இருப்பினும் அவரது முகத்தையாவது தங்களிடம் காட்டிவிடும்படி அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தேடுதல் பணியில் மலேசிய அரசாங்கம் முழு கடப்பாட்டுடன் செயல்பட்டு வருவதாக அவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது,” என்று துணைப் பிரதமர் அமாட் ஜாஹிட் ஹமிடியின் சிறப்பு அதிகாரியான அரவிந்த் அப்பளசாமி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here