குளுவாங்:
இங்குள்ள தாமான் ஸ்ரீ லம்பாக் அருகே கண்டுபிடிக்கப்பட்ட பழைய வெடிகுண்டை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த, ஜோகூர் காவல்துறை அதிகாரிகள் இருவர் நிலச்சரிவில் சிக்கி காயமடைந்தனர்.
இந்தச் சம்பவத்திற்கு முன்னதாக, செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 27) காலை 8.50 மணியளவில் ஜாலான் தாப்பாவில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக பொதுமக்களிடமிருந்து காவல்துறைக்கு அழைப்பு வந்தது என்று, குளுவாங் OCPD துணை ஆணையர் பஹ்ரின் முகமட் நோ கூறினார்.
உடனே ஜோகூர் மற்றும் குளுவாங்கின் போலீஸ் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவுகளில் இருந்து ஒரு குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது.
“பிற்பகல் 2.20 மணியளவில், அந்த இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதாக MERS 999 ஹாட்லைன் எண் மூலம் காவல்துறைக்கு அழைப்பு வந்தது,” என்று அவர் நேற்று (ஆகஸ்ட் 28) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
ஜோகூர் காவல்துறை வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவைச் சேர்ந்த இரண்டு பணியாளர்கள் வெடிகுண்டை செயலிழக்கத் தயாராகிக்கொண்டிருந்தபோது, நிலச்சரிவு ஏற்பட்டதாக ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டதாக ஏசிபி பஹ்ரின் கூறினார்.
“வெடிகுண்டை அகற்றும் பணி தொடங்கும் முன் மழை பெய்து கொண்டிருந்தது. நிலச்சரிவு காரணமாக இரண்டு போலீஸ்காரர்களும் ஒரு மண் குவியலுக்கு அடியில் புதையுண்டனர், மேலும் அவர்கள் இருவரும் பலத்த காயங்களுக்கு ஆளாகினர், ”என்று அவர் சொன்னார்.
இருப்பினும் அவர்கள் இருவரும் உடனடியாக இங்குள்ள என்சே பெசார் ஹஜ்ஜா கல்சோம் மருத்துவமனைக்கு மருத்துவ சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டதாக அவர் கூறினார்.








