பெங்களூரு:
பெங்களூரு சிறையில் நடிகர் தர்ஷனுக்கு ராஜ உபசாரம் செய்த சிறை சூப்பிரண்டுகள் உட்பட ஒன்பது பேர், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளனர். தர்ஷனை பெலகாவி ஹிண்டல்கா சிறைக்கு மாற்றவும் கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., அரசு நடக்கிறது. தன் தோழி பவித்ராவுக்கு ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பிய சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி, 33, என்ற ரசிகரை கொலை செய்த வழக்கில் கைதான பிரபல நடிகர் தர்ஷன், 47, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில், 65 நாட்களுக்கும் மேலாக அடைக்கப்பட்டு உள்ளார்.
இவர், அதே சிறையில் இருக்கும் பிரபல ரவுடிகள் வில்சன் கார்டன் நாகா, குல்லா சீனா ஆகியோருடன், ஒரு கையில் டீ கப், இன்னொரு கையில் சிகரெட்டுடன் திறந்தவெளியில் நாற்காலியில் அமர்ந்து பேசும் புகைப்படம் நேற்று முன்தினம் வெளியானது.
தொடர்ந்து, சிறையில் இருந்தபடியே ஒருவருடன் வீடியோ காலில் தர்ஷன் பேசும் காட்சிகளும் வெளியாகி, அதிர்ச்சியை அளித்தன.
இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, முதல்வர் சித்தராமையாவை, கர்நாடக போலீஸ் டி.ஜி.பி., அலோக் மோகன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அன்று இரவு உள்துறை அமைச்சர் பரமேஸ்வரை, பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தாவும் சந்தித்து பேசினார்.
இந்நிலையில், பரப்பன அக்ரஹாரா சிறையில் அமைச்சர் பரமேஸ்வர் நேற்று காலை ஆய்வு நடத்தினார்.
பின், அவர் அளித்த பேட்டி:
தர்ஷனுக்கு சிறையில் ராஜ உபசாரம் கிடைப்பது தொடர்பான புகைப்படங்கள் என் கவனத்திற்கு வந்ததும், சிறை துறை டி.ஜி.பி., மாலினி கிருஷ்ணமூர்த்தியிடம் ஆலோசனை நடத்தினேன்.
தர்ஷனுக்கு உதவிய சிறை சூப்பிரண்டுகள் கேசவமூர்த்தி, மல்லிகார்ஜுன் சாமி, தலைமை வார்டன்கள் வெங்கடப்பா, சம்பத்குமார், வார்டன் பசப்பா, ஜெயிலர்கள் சரணபசவா, பிரபு, உதவி ஜெயிலர்கள் திப்பேசாமி, ஸ்ரீகாந்த் ஆகிய ஒன்பது பேரை, ‘சஸ்பெண்ட்’ செய்துஉள்ளோம்.
தர்ஷனுக்கு ராஜ உபசாரம் கிடைத்தது பற்றி விரிவான அறிக்கை கேட்டுள்ளேன். இதில், எவ்வளவு பெரிய அதிகாரிகள் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கப்படும்.
சிறையில், 24 மணி நேரமும் கண்காணிப்பு உள்ளது. அதையும் மீறி தர்ஷன், மேலும் சிலர் வட்டமாக அமர்ந்து டீ குடித்து உள்ளனர். எங்கு தவறு நடந்துள்ளது என்று பார்ப்போம்.









