கோலாலம்பூர்:
இங்குள்ள ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் ஏற்பட்ட திடீர் நிலஅமிழ்வில் சிக்கிய இந்திய நாட்டவரைத் தேடும் (SAR) நடவடிக்கை, இன்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) அதிகாலை 5 மணியளவில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட பின்னர், தற்போது எட்டாவது நாளாக மீண்டும் தொடங்கியது.
கழிவு நீர் குழாயில் விஜயலட்சுமியை தேடும் பணி இன்று அதிகாலை வரை நீடித்து, 5 மணிக்கு தேடுதல் மற்றும் மீட்பு பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று காலை 8 மணியளவில் தேசிய காவல்படை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை , DBKL மற்றும் கனிமங்கள் மற்றும் புவி அறிவியல் துறை ஆகிய துறைகளைக் கொண்ட உறுப்பினர்கள் குழு மீண்டும் தேடுதலை ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில், ஜாலான் மஸ்ஜிட் இந்தியா மீட்பு நடவடிக்கை பகுதிக்குள் பொதுமக்கள் நுழைய வேண்டாம் என்று, டாங் வாங்கி மாவட்ட காவல்துறை தலைவர் துணை ஆணையர் ஷுலிஸ்மி அபெண்டி சுலைமான் தெரிவித்துள்ளார்.
இது தேடுதல் முயற்சிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்றும், அனுமதிக்கப்படாத பகுதிக்குள் யாரும் தன்னிச்சையாக செல்ல வேண்டாம் என்று அவர் ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் நடந்த ஓர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.