வாழ்க்கையின் விளிம்பில் விரக்தியுற்றிருந்த முதியவருக்கு மலேசிய மக்கள் நல சேவைக் கழகம் உதவியது

பூச்சோங்:
மனைவியும் மூன்று பிள்ளைகளும் கைவிட்ட நிலையில் வாழ்வதற்கான நம்பிக்கையே போய்விட்டது என்ற விரக்தியில் கண்ணீர் மல்க உதவி கோரிய முதியவர் தமிழரசன் மாரியப்பனின் நிலைமையறிந்து தன்னார்வத் தொண்டு இயக்கமான மலேசிய மக்கள் நல சேவைக் கழகம் அவருக்கு உதவ முன் வந்தது.

பூச்சோங் பெர்டானாவிலுள்ள ஒரு மலிவு விலை அடுக்ககத்தின் நான்காவது மாடியிலுள்ள அறையொன்றில் ஆழ்ந்த மனச் சோர்வுடன் தொடர்ந்து வாழ்வதற்குரிய நம்பிக்கையையே இழந்து விட்ட நிலையில் தன்னந்தனியாக  வசித்து வந்தார் 71 வயது முதியவரான தமிழரசன்.

“சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட சாலை விபத்தொன்றினால்  கடுமையாகப் பாதிக்கப்பட்டேன். கால்கள் பாதிக்கப்பட்டதால் வேலை செய்ய முடியாமல் எங்கும் நடமாட இயலாத நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் என் மனைவியும் மூன்று பிள்ளைகளும் என்னைப்புறக்கணித்து விட்டு இங்கேயே தனியாக விட்டு விட்டுச் சென்று விட்டனர். இதனால் மன ரீதியில் நான் வெகுவாகப் பாதிக்கப்பட்டேன்.” என்று அவர் சோகத்துடன் கண்ணீர் மல்கக் கூறினார்.

இதற்கு முன் வாடகை வீட்டில் வசித்தபோது என் மனைவி வீட்டு வாடகைக் கட்டணத்தைச் செலுத்தி வந்தார். அதன் பின் வீட்டு உரிமையாளர் வாடகையை உயர்த்தி விட்டதால் ஒன்றுக்கும் பயனில்லாதவர் என்று கூறி என்னைப் புறக்கணித்த குடும்பத்தினர்  உன் வழியை நீயே பார்த்துக் கொள் எனக் கூறி என்னைத் தனியாக விட்டு விட்டு அங்கிருந்து வெளியேறினர்.

என் குடும்பத்தினர் என்னை ஏற்றுக் கொள்ளாத நிலையில் வாடகைக் கட்டணமும் செலுத்த இயலாமல் அன்றாட உணவுக்கும் அக்கம் பக்கத்தாரிடம் கை ஏந்தி வந்த சூழ்நிலையில் அதே அடுக்ககத்தின் தனியொரு அறையில் வாடகைக்குத் தங்கியிருந்தேன்.  பின் அதற்கும் வாடகை கட்ட சிரமம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அதன் உரிமையாளரும் என்னை அங்கிருந்து வெளியேறும்படி வற்புறுத்தினார்.

இதனால் தங்குவதற்கும் இடமில்லாத சூழ்நிலையில் என் நெருங்கிய நண்பரான கண்ணன் என்பவரைத் தொடர்பு கொண்டு பிரச்சினையைத் தெரிவித்ததன் வாயிலாக மேற்பட்ட மக்கள் சேவைக் கழகத்தின்  உதவி கிடைத்தது.” என்று தமிழரசன் மக்கள் ஓசையிடம் விவரித்தார்.

குடியிருக்க வீடின்றி மன உளைச்சலுடன் அவதிப்பட்டு வந்த முதியவர் தமிழரசனின் நிலைமையைக் கேள்விப்பட்ட  மேற்பட்ட இயக்கத்தின் கிள்ளான் வட்டாரப் பிரதிநிதியான சாய் சுந்தரம் குப்புசாமியுடன் அவரது இயக்க உறுப்பினர்களான நெல்சன், என்.வி.சுந்தரம் ஆகியோர் சம்பந்தப்பட்ட அடுக்குமாடியின் நான்காவது  மாடிக்குச் சென்று அவரைக்  காப்பாற்றும் நடவடிக்கையில் இறங்கினர். நடப்பதற்குக் கூட சிரமப்பட்ட தமிழரசனை அங்குள்ள படிக்கட்டின் வழியாகத் தூக்கி வந்து இரு சக்கர வண்டியின் மூலம் வாகனத்தில் ஏற்றி பின் கிள்ளானில் இயங்கும் ஓர் முதியோர் இல்லத்தில் கொண்டு சேர்த்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here