சென்னை:
‘தூய்மைப்பணியாளர்களை வஞ்சித்ததோடு, அவர்களது போராட்டங்களை அதிகாரத்தின் துணைகொண்டு அடக்கி, ஒடுக்க முயல்வது வெட்கக்கேடானது’ என்று தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் தூய்மைப்பணியாளர்களின் கடும் எதிர்ப்பினையும் மீறி, 11 மண்டலங்கள் தனியாரிடம் தாரை வார்க்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 4 மண்டலங்களையும் தனியாரிடம் ஒப்படைக்க தி.மு.க., அரசு முடிவெடுத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. இது தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைக்கவே வழிவகுக்கும்.
கடந்த அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் சென்னை மாநகராட்சி தூய்மைப்பணியாளர் பணியிடங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டபோது, அதற்குக் கடுங்கண்டனம் தெரிவித்து, திமுக ஆட்சிக்கு வந்தால் பணியாளர்கள் அரசுப்பணியில், பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.
ஆனால், தேர்தலில் வென்று முதல்வராக ஆட்சிப்பொறுப்பேற்ற பின் இன்று வரை அதை நிறைவேற்ற மறுத்ததுடன், மீதமுள்ள 4 மண்டலங்களையும் தனியாரிடம் ஒப்படைப்பதென்பது வாக்களித்து ஆட்சியில் அமர்த்தியவர்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகம் என்றார்.










