பாலிவுட் திரையுலகில் தயாராகி வரும் ‘ராமாயணம்’ படத்தில் ரன்பீர் கபூர் ராமனாகவும் சாய் பல்லவி சீதையாகவும் நடித்து வருகின்றனர். இந்நிலையில், தனது 10 ஆண்டுகால நேசம் குறித்து பகிர்ந்துகொண்டுள்ள சாய் பல்லவி, ‘மகாபாரதம்’ மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உள்ளது. அதில் அர்ஜுனனின் மகனாக வரும் அபிமன்யு கதாபாத்திரத்தை எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் கடந்த 10 ஆண்டுகளாக அபிமன்யு பற்றி நிறைய தெரிந்துகொண்டதுடன், அவரை நேசித்தும் வருவதாகக் கூறியிருக்கிறார் சாய் பல்லவி.
இதையறிந்த ரசிகர்கள், இது என்ன அப்படி ஒரு புதுவிதமான நேசம் என அவரிடம் கேள்வி கேட்டு வருகின்றனர். ஏ.எல்.விஜய் இயக்கிய ‘தியா’ படம் மூலம் கோலிவுட் திரையுலகில் காலடி எடுத்து வைத்த நடிகை சாய் பல்லவி, அடுத்தடுத்து ‘மாரி 2, ‘என்ஜிகே’ போன்ற படங்களில் நடித்தார். பின்னர் டோலிவுட் பக்கம் சென்று அங்கு ராசியான நாயகியாக உருவெடுத்தார்.
நாயகி பாத்திரத்துக்கு முக்கியத்துவம் தரும் படங்களாகத் தேர்ந்தெடுத்து நடிக்கும் சாய் பல்லவி. தனது பாத்திரம் பிடிக்கவில்லை என்றால் முன்னணி நடிகரின் படமாக இருந்தாலும் அதில் நடிக்க மறுத்து விடுகிறாராம். அதனால்தான், விஜய், அஜித், சிரஞ்சீவி போன்ற முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகளைக் கூட அவர் வேண்டாம் என உதறித்தள்ளி விட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது தமிழில் ‘அமரன்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது. இதுதவிர தெலுங்கில் நாக சைதன்யாவின் ஜோடியாக ‘தண்டல்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார் சாய் பல்லவி.