ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் . 50 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருவதால் இரு மாநிலங்களும் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. 33 பேர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானவர்கள் வீடுகளையும் விவசாய நிலங்களையும் இழந்து கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். பல ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சாலைகள், தண்டவாளங்கள் நீரில் மூழ்கியிருப்பதால் போக்குவரத்து பெரிதாகப் பாதிப்புக்குள்ளாயுள்ளது. மின்சாரக் கட்டமைப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளநீர் புதன்கிழமை சற்று வடியத் தொடங்கிய நிலையில், செப்டம்பர் 7ஆம் தேதி வரை தொடர் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெலுங்கானாவுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. செப்டம்பர் 4 ஆம் தேதி பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அது அறிவித்தது. தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, தொடர்ந்து ஆதரவளிப்பதாக உறுதியளித்தனர்.
இதனை தேசிய பேரிடராக அறிவித்து கூடுதல் நிதி வழங்க வேண்டுமென இருவரும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கொட்டித் தீர்க்கும் மழையினால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணா நதியில் மட்டும் விநாடிக்கு 10 லட்சம் கனஅடி வெள்ளம் கரையை தாண்டி ஓடுகிறது.
கிருஷ்ணா நதி, பூதமேறு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் விஜயவாடா நகரின் பெரும் பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. ஆந்திராவில் மட்டும் கிட்டத்தட்ட 20 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
இரு மாநிலங்களிவுக் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாழ்பட்டுள்ளன. தெலுங்கானாவில் இந்த மழைக்கு ரூ.100 கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டு இருப்பதாகவும், பயிர் சேதம் மேலும் பல கோடி இருக்கும் என அதிகாரிகள் கணக்கீடு செய்துள்ளனர். 200 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவு மழை அங்கு பொழிந்திருக்கிறது.
இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்துக்கு பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த நிதியுதவியை அளித்து வருகின்றனர். நடிகர்கள் சிரஞ்சீவி, மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன் மூவரும் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளனர். அக்கினேனி நாகேசுவர ராவ் குடும்பமும் ஒரு கோடி ரூபாய் உதவி அறிவித்துள்ளது. பட தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனமும் ஆந்திர முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய் வழங்கியிருக்கிறது.