பாக்.ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிப்பவர்கள் இந்தியாவுக்கு வரலாம்: ராஜ்நாத் சிங்

யூனியன் பிரதேசமான ஜம்மு – காஷ்மீரில், வரும் 18, 25 மற்றும் அக்- 1ல் மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் நடக்கும் முதல் தேர்தல் என்பதால், இந்த தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் -தேசிய மாநாட்டு கட்சி இணைந்து போட்டியிடுகிறது. பாஜக, மக்கள் ஜனநாயக கட்சிகள் தனியாக தேர்தலை சந்திக்கின்றன.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், ராம்பான் மாவட்டத்தில் நேற்று நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் மூத்த தலைவரும், பாதுகாப்புத்துறை மந்திரியுமான ராஜ்நாத் சிங் பேசியதாவது:

கடந்த 2019 ஆகஸ்டில், ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின், அங்கு பாதுகாப்பு மேம்பட்டுள்ளது. இளைஞர்கள் தற்போது துப்பாக்கிகளுக்கு பதில், லேப்டாப்களை எடுத்துச் செல்கின்றனர். பாஜக தலைமையில் அரசு அமையும் பட்சத்தில், இதுவரை கண்டிராத வளர்ச்சியை, ஜம்மு – காஷ்மீர் அடையும்.

இதைப் பார்த்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிக்கும் மக்கள், ‘நாங்கள் பாகிஸ்தானுடன் வாழ விரும்பவில்லை; இந்தியாவுக்குச் செல்கிறோம்’ என்று சொல்லும் அளவுக்கு வளர்ச்சி இருக்கும். பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிப்போரை, வெளிநாட்டவர்களாக, பாகிஸ்தான் நினைக்கிறது. ஆனால் இந்தியா அப்படி நினைக்கவில்லை. அவர்களை சொந்த மக்களாகவே கருதுகிறது; அவர்கள் தாராளமாக இந்தியாவுக்கு வரலாம் இவ்வாறு பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here