கோலாலம்பூர்:
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தின் முன்புற நுழை வாயிலில் நிகழ்ந்த ஒரு விபத்தில் ஆடவர் ஒருவர் டாக்சிக்கு அடியில் சிக்கிக் கொண்டார்.
அவரை வெளியில் எடுப்பதற்கு தீயணைப்பு மீட்பு இலாகா உதவி நாடப்பட்டது.
மொத்தம் மூன்று கார்கள் இந்த விபத்தில் சம்பந்தப்பட்டதாக அறியப்படுகிறது.
கார் ஒன்றால் மோதப்பட்ட தன் காருக்கு நேர்ந்த நிலைமையைக் கண்டறிய சம்பந்தப்பட்ட அந்த ஆடவர் தன்னுடைய காரிலிருந்து கீழே இறங்கி நின்றார்.
அப்போது வேகமாக அங்கே வந்த டாக்சி ஒன்று அவரை மோதித் தள்ளியது. தடுமாறி கீழே விழுந்த அவர் டாக்சியின் கீழ் சிக்கிக் கொண்டார்.
அவரை வெளியேற்றும் முயற்சி பலனளிக்காததால் தீயணைப்பு மீட்பு இலாகாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விடியற்காலை 6.57 மணிக்கு அந்தச் ச ம்பவம் தொடர்பில் தொலைப்பேசி அழைப்பு கிடைக்கப் பெற்றதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மீட்பு இலாகா உதவி இயக்குநர் அமாட் முக்லிஸ் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்ற கே.எல்.ஐ.ஏ. தீயணைப்பு மீட்பு நிலைய வீரர்கள் அந்த ஆடவரை மீட்டு வெளியில் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 40 வயது மதிக்கத் தக்க அந்த ஆடவர் நினைவிழந்த நிலையில் அந்த டாக்சியின் கீழ் சிக்கிக் கிடந்தார் என்று நம்பப்படுகிறது.