மணலி துணை மின்நிலையத்தில் தீ விபத்து: சென்னை முழுவதும் மின்வெட்டு

சென்னை மணலி துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் சென்னை முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. மணலியில் 400 கிலோ வாட் திறன் கொண்ட முக்கிய யூனிட்டில் ஒரு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் மின்சார விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த பகுதியை அகற்றி மீண்டும் மின் விநியோகம் வழங்குவதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்த சூழலில் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டதால் மத்திய சென்னை, வடசென்னை மற்றும் தென் சென்னை பகுதிகளில் மின்சார தடை ஏற்பட்டுள்ளது. மின்சார விநியோகம் தடைபட்டுள்ளதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். தமிழ்நாடு மின்வாரியத்தின் சேவை மைய எண்ணையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். பிரதான சாலைகள் அனைத்திலும் விளக்குகள் எரியாததால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் அடுத்த 15 முதல் 30 நிமிடத்தில் மின் விநியோகம் சீராகும் என மின்துறை செயலாளர் ராஜேஷ் லக்கானி தகவல் தெரிவித்துள்ளார். மேலும் ஆர்.ஏ.புரம், மைலாப்பூர், புளியந்தோப்பு உள்ளிட்ட இடங்களுக்கு முதலில் மின் விநியோகம் சீரடையும் எனவும். மற்ற இடங்களுக்கு படிப்படியாக சீராகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here