சீன வாக்காளர்களை வெல்ல அம்னோ டிஏபியைப் பயன்படுத்துவதாக கூறுவது உண்மையல்ல – ஒன் ஹபீஸ்

மஹ்கோத்தா மாநில இடைத்தேர்தலில் சீன வாக்காளர்களை வெல்ல அம்னோ டிஏபியை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று ஜோகூர் மந்திரி பெசார் ஒன் ஹபீஸ் காசி கூறுகிறார். ஜோகூர் அம்னோ தலைவரான ஓன் ஹபீஸ் கூற்றுக்கள் ஆதாரமற்றவை என்றும் மரியாதை, நல்லிணக்கம் மற்றும் முறையான நடத்தை ஆகியவற்றில் வேரூன்றிய ஜோகூர் அதன் தனித்துவமான அரசியல் அணுகுமுறையைக் கொண்டுள்ளது என்றும் கூறினார்.

அத்தகைய அரசியலுக்கு ஜோகூரில் இடமில்லை. நாங்கள் எப்போதும் மரியாதை,  இன நல்லிணக்கத்தைப் பேணுகிறோம் என்று அவர் கூறியதாக உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டிருந்தது. அவதூறு மற்றும் தூண்டுதலால் மயங்காதீர்கள். ஜோகூர் மக்களுக்கு, குறிப்பாக மஹ்கோத்தா தொகுதியில் உள்ளவர்களுக்கு இதுவே எனது வேண்டுகோள்.

நேற்றிரவு நடந்த பிரச்சாரத்தில், பெர்சத்துவின் பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்மான் நஸ்ருடின், மஹ்கோத்தா தொகுதியில் உள்ள சீன வாக்காளர்களை டிஏபியை நிராகரிக்குமாறு வலியுறுத்தினார். அந்தக் கட்சியை அம்னோவால் வாக்குகளைப் பெறப் பயன்படுத்துவதாகக் கூறினார். சீன வாக்காளர்களை வெல்ல அம்னோ டிஏபியின் பிரச்சார இயந்திரத்தை நம்பியிருப்பதாக அஸ்மான் கூறினார்.

மஹ்கோத்தா இடைத்தேர்தல் செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. முன்கூட்டியே வாக்குப்பதிவு செப்டம்பர் 24 ஆம் தேதி நடைபெறும். இந்த இடைத்தேர்தலில் பாரிசான் நேஷனல் கட்சியின் வேட்பாளர் சையத் ஹுசைன் சையது அப்துல்லா மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் கட்சியின் ஹைசான் ஜாபர் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. அம்னோ சட்டமன்ற உறுப்பினர் ஷரிபா அசிஸா சையத் ஜைன் ஆகஸ்ட் 2 அன்று இறந்ததைத் தொடர்ந்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. 2022 மாநிலத் தேர்தலில் அவர் 5,166 வாக்குகள் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here