செ.குணாளன்
பட்டர்வொர்த் :
பினாங்கில் இன்று விடியற்காலை 5.00 மணியில் இருந்து காலை 9.00 மணி வரை பெய்த அடைமழையால் பல இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. புயலின் சீற்றத்தில் 200 க்கும் அதிகமான மரங்கள் வேரோடு சாய்ந்தன.
பெர்மாத்தாங் ராவா, பெர்டா, பாயான் லெப்பாஸ், நிபோங் தெபால் ஆகிய பகுதிகளில் திடீர் வெள்ளப் பாதிப்பு மிகக் கடுமையாக இருந்தது.
பாயா தெருபோங், ரேலாவ், புக்கிட் ஜம்புல், பூலாவ் திக்கூஸ், பாயான் பாரு, பாலிக் பூலாவ், தஞ்சோங் பூங்கா, பெனாகா, பட்டர்வொர்த் ஆகிய பகுதிகளில் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
இங்கு ஜாலான் சீராம், தமிழர் சுடுகாடு எதிர் புறத்தில் பெரிய மரம் ஒன்று வேரோடு கார் மீது சாய்ந்ததில் அதில் பயணித்த கர்ப்பிணிப் பெண் காப்பாற்றப்பட்டார்.
ஜாலான் சீராம் சாலையில் காலை 8:30 மணிக்கு மரக்கிளைகளின் இடுக்கில் சிக்கிக்கொண்ட காரில் இருந்த கர்ப்பிணிப் பெண்ணை உடல் பேறு குறைந்த ஆடவர் ஒருவர் காப்பாற்றினார்.
காப்பாற்றப்பட்ட மாது செபெராங் ஜெயா மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.








