க.கலை
சிரம்பான்:
மக்கள் நலனில் அக்கறை செலுத்தி அது சார்ந்து பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் மெட்ரிக்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் பல இன மக்களின் நல்லிணக்கத்தை பேணும் வகையில் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் முதன்முறையாக நைட் மராத்தோன் எனப்படும் இரவு நேர நெடுவோட்ட போட்டியை ஏற்பாடு செய்துள்ளது வரவேற்கத்தக்கது என்று அம்மாநில மந்திரிபெசார் டத்தோஸ்ரீ உத்தாமா அமினுடின் ஹருன் பாராட்டினார்.

பண்டார் ஸ்ரீ செண்டாயான். கன்ட்ரி கிளப்பில் நடைபெற்ற இந்த நெடுவோட்டப் போட்டி அனைவரின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ளது.
இந்த ஓட்டப் போட்டியில் மலேசியா மட்டுமல்லாது மற்ற நாடுகளை பிரதிநிதித்தும் போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். அதோடு இப்போட்டியில் மாற்றுத்திறனாளிகளும் பங்குபெற வாய்ப்பளித்தது வரவேற்கத்தக்க செயல் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் இதுபோன்ற இரவுநேர நெடுவோட்டப் போட்டியை சாதாரணமாக நடத்திவிட முடியாது. மெட்ரிக்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துடன் சிரம்பான் மாநகர் மன்றம், நெகிரி செம்பிலான் இளையோர் இலாகா போலீஸ் படை என அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்போடுதான் இந்த போட்டியை சீராகவும் வெற்றிகரமாகவும் நடத்த முடிந்தது என மந்திரிபெசாருர் வாழ்த்தும் தெரிவித்துக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய மெட்ரிக்ஸ் கொன்ஸ்சப் ஹோல்டிங்ஸ் நிறுவனத் தலைவர் டத்தோ முகமட் ஹஸ்லா முகமட் அமின். இந்த போட்டியில் சுமார் 5,000 பேர் கலந்துகொண்டனர். இது ஓர் அருமையான திட்டம். இந்த போட்டியின் மூலம் நல்லிணக்கத்தையும ஒற்றுமையையும் மேலும் வலுப்படுத்த முடிகின்றது என்றார்.

அதேபோல் மெட்ரிக்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் மக்களை ஈர்ப்பதற்கும் அவர்களை ஒன்றிணைப்பதற்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது எனவும் கூறினார். முன்னதாக இந்த நைட் மராத்தோன் போட்டியில் 5 கிலோ மீட்டர் ஒட்டப்பந்தயப் பிரிவில் 3,000 பேர் கலந்துகொண்டனர்.
அதேபோல் 10 கிலோ மீட்டர் பிரிவில் 1.046 பேரும் 21.1 கிலோமீட்டர் பிரிவில் 957 பேரும் பங்கேற்றனர். ஒட்டப்பந்தயம் மட்டுமன்றி இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட படைப்புகளும் இடம்பெற்றன. அதோடு மலேசிய தினத்தை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு வாண வேடிக்கையும் இருந்தது.அதுமட்டுமன்றி டோலா. எம்சி கார்ல், ஜெஸ்டினா குவான், டெனிலி உள்ளிட்ட புகழ்பெற்ற கலைஞர்களின் படைப்புகளும் இடம்பெற்றிருந்தது.

இதனிடையே நாட்டில் உள்ள முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான மெட்ரிக்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் வழங்கி வருகின்றது. கல்வி, சுகாதாரம், பொருளாதாரம். வீடமைப்பு உள்ளிட்ட அம்சங்களில் இந்நிறுவனம் முன்னுரிமை வழங்குகிறது. சுற்றுப்புறத்தை வளப்படுத்தி மக்கள் சுகாதாரமிக்க சூழலில் வாழ்வதற்கு இந்நிறுவனம் முனைப்பு காட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
























