திருச்சியில் சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் தனியாக கழன்று ஓடிய 3 பெட்டிகள்!

திருச்சி: 

இராமேசுவரத்திலிருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் இரவு புறப்பட்ட சேது எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று அதிகாலை 1.20 மணிக்கு திருச்சி ரயில் நிலையத்துக்கு வந்து, 1.40 மணிக்கு சென்னைக்குப் புறப்பட்டது.

நடைமேடையிலிருந்து சுமார் 100 மீட்டர் சென்ற நிலையில், ரயிலின் கடைசியில் இருந்த எஸ்-1 பெட்டி, பொதுப்பெட்டி மற்றும் மகளிர் பெட்டி என 3 பெட்டிகள் தனியாகக் கழன்றன. இதனால் அந்த 3 பெட்டிகளிலும் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்து, கூச்சலிட்டனர். இதையறிந்த ரயில் லோகோ பைலட் உடனடியாக ரயிலை நிறுத்தினார். மேலும், கழன்ற பெட்டிகள் சிறிது தூரம் ஓடி நின்றன.

தகவலறிந்து வந்த ரயில்வே பொறியாளர்கள், ஊழியர்கள் உடனடியாக ரயில் பெட்டிகளை இணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பணிகள் நிறைவடைந்து சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக, அதிகாலை 2.30 மணியளவில் ரயில் புறப்பட்டுச் சென்றது.

“ரயிலில் இருந்து பெட்டிகள் கழன்றது குறித்து சென்னை பராமரிப்பு பணிமனையில் விசாரணைநடத்தப்படும். இது தொடர்பாக இங்கிருந்து ஒரு அறிக்கை அனுப்பப்படும். இந்த சம்பவத்தால் பயணிகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை” என ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here