புத்ராஜெயா: மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு (JBPM) இந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஜூலை இடையே மரங்கள் விழுந்தது தொடர்பான 2,575 அவசர அழைப்புகளை பெற்றுள்ளது. அதில் சிலாங்கூர் அதிக எண்ணிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று ஒரு அறிக்கையில், சிலாங்கூரில் 441 மரங்கள் விழுந்ததாகவும், அதைத் தொடர்ந்து பேராக்கில் 321 மற்றும் சரவாக்கில் 264 மரங்கள் விழுந்ததாகவும் JBPM தெரிவித்துள்ளது. இந்த சம்பவங்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 27 பேர் பல்வேறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். 37 பேர் காயமின்றி மீட்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசமான வானிலையின் போது பொதுமக்கள், குறிப்பாக சாலையைப் பயன்படுத்துபவர்கள் விழிப்புடன் இருக்குமாறு JBPM அறிவுறுத்தியுள்ளது. ஓட்டுநர்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் குறிப்பாக பெரிய அல்லது பழைய மரங்கள் இருபுறமும் உள்ள சாலைகளில் கவனமாக இருக்க வேண்டும். ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்தால், பீதி அடைய வேண்டாம். வாகன எஞ்சினை அணைத்துவிட்டு பொதுமக்களின் உதவியை நாடவும் அல்லது உதவிக்கு 999 என்ற அவசரகால ஹாட்லைனைத் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.









