கொம்தாரில் மலேசிய இந்து சங்கத்தின் ஏற்பாட்டில் இல்லவழிபாடு-கூட்டுப் பிரார்த்தனை அரங்கம்

ஜார்ஜ் டவுன்:
லேசிய இந்து சங்க தேசிய மகளிர் பிரிவு ஏற்பாட்டில் செப்டம்பர் 22 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை கூட்டுப் பிரார்த்தனை-இல்ல வழிபாடு குறித்த பயிலரங்கம் பினாங்கு மாநில தலைமைச் செயலகம் அமைந்துள்ள கொம்தார் வளாகத்தில் பக்திப் பெருக்குடன் நடைபெற்றது.

இந்து சங்க தேசியத் தலைவர் ‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன் தலைமையிலான உச்சமன்றக் குழு வழிகாட்டுதலின்படி தேசிய மகளிர்-குடும்பப் பிரிவு தலைவர் முனைவர் ச.கலைவாணி, செயலாளர் விவேகரத்னா திருமதி அன்புக்கரசி ஆகியோர்தம் இணை ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பினாங்கு, கெடா, பேராக் ஆகிய மாநிலப் பேரவைகளின் சார்பில் 72 பெண்கள் கலந்து கொண்டனர்.

வட மாநிலங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இந்த நிகழ்ச்சிக்கு பினாங்கு இந்து அறவாரியம் ஆதரவு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இல்லங்களில், குறிப்பாக இல்லத்தரசிகள் நடத்தும் வழிபாடு, எப்படி இறைமாண்புடன் சிறப்புற அமைய வேண்டும்?; பெருமைமிகு இந்து சமய வழிபாட்டு முறை, நாகரிகம்-நவீனம் என்ற பெயரில் சிதையாமலும் அதன் பாரம்பரிய மேன்மை மாறாமலும் எப்படி அமைய வேண்டும்?

இந்த உலகில் நல்லவண்ணம் வாழும் பெரும்பேறு தந்த இறைவனை வழிபாட்டின்போது எங்ஙனம் மனதில் நிலைநிறுத்த வேண்டும்? அணுவாகவும் அண்டமாகவும் அண்டத்தின் பிண்டமாகவும் அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளுக்கு எவ்வாறு நன்றியறிதலை வெளிப்படுத்த வேண்டும் என்பதையெல்லாம் உள்ளடக்கி இருக்க வேண்டும் என்னும் இறைக்கூறுகளை தெளிவுப்படுத்துவதற்காக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை தேசியத் தலைவர் தங்க கணேசன் உரை நிகழ்த்தி தொடக்கிவைத்தார்.

வீட்டில் முறையாக நடைபெறும் வழிப்பாட்டின்போது இறையன்பர்களுக்கும் ஆண்டவனுக்கும் இடையே விவரிக்க முடியாத நேரடி தொடர்பும் உள்ளத்தில் நிறைவும் ஏற்படுவதை நம்மால் உணரமுடியும். தவிர, ஆன்மீக ஒழுக்கத்தை வளர்க்கவும் வாழ்வில் தர்ம சிந்தனை-நன்னெறிப் பாங்கு மேன்மையுறவும் தனி இல்ல வழிபாடும் கூட்டுப் பிரார்த்தனையும் துணைபுரிகின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக, வெளிப்புற சக்திகளின் தாக்கத்தில் இருந்தும் நமக்கு உள்ளும்புறமுமான பாதுகாப்பையும் அன்றாட இல்ல வழிபாடு நமக்கு அளிக்கிறது.

இதையெல்லாம் குடும்பத் தலைவியருக்கு எடுத்துக்காட்டும் விதமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை, சிவஸ்ரீ என்.தினேஷ் வர்மன் வழிநடத்தினார்.

மலேசிய இந்து சங்க செபெராங் ஜெயா வட்டாரப் பேரவைத் தலைவரும் பினாங்கு இந்து அறவாரிய ஆணையருமான தினேஷ்வர்மன் வழிநடத்திய இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்துப் பெண்களும் கூட்டுப் பிரார்த்தனை, இல்ல வழிபாடு குறித்த மேன்மையை உணர்ந்ததாகத் தெரிவித்தனர்.

இந்து சங்க தேசிய உதவித் தலைவர் மா. முனியாண்டி, பினாங்கு மாநிலப் பேரவைத் தலைவர் ‘விவேகரத்னா’ ஆ.தருமன், பினாங்கு மாநில பொருளாளர் எஸ்.கிருஷ்ணவேணி, பேராக் மாநில செயலாளர் சிவம், கெடா மாநில மகளிர் தலைவி பஞ்சவர்ணம், நெகிரி செம்பிலான் மாநில மகளிர் தலைவி விஜயா, பேராக் மாநில மகளிர் தலைவர் சிவசுகுணா, பினாங்கு மாநில மகளிர் பிரிவைச் சேர்ந்த புவனேஸ்வரி, பட்டர் வொர்த் வட்டாரப் பேரவையின் செயலாளரும் மகளிர் தலைவியுமான விவேகரத்னா டி.நளினி தேவி உள்ளிட்டோர் துணைநின்ற இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

முனைவர் கலைவாணி இந்த நிகழ்ச்சிக்கு தலைமையேற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here