பி.ஆர்.ராஜன்
கோலாலம்பூர்: உலு சிலாங்கூர், களும்பாங்கில் கம்பீரமாக வீற்றிருக்கும் மைஸ்கில்ஸ் அறவாரிய கேம்பஸிற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் ஆகிய இருவரையும் அழைத்து வருவது தம்முடைய பொறுப்பு என்று இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோ வாக்குறுதி தந்திருக்கிறார்.
இந்த அறவா ரியத்தின் இன்றைய வளர்ச்சி, வெற்றிகளை கண்டு வியந்து போன அவர், மனம் நிறைந்து வாழ்த்தினார்.
திக்குத் தெரியாமல் திரிந்த, வாய்ப்பு வசதி கிடைக்காமல் வாழ்க்கையை தொலைக்கும் நிலையில் இருந்த இளைஞர்களுக்கு நடத்தப்பட்டு வரும் திவெட் எனப்படும் தொழில்நுட்பம், கல்வி, தொழில் பயிற்சிகளின் மகத்தான வெற்றியை ஹன்னா இயோ பாராட்டினார்.
திக்குத் தெரியாது தடம் மாறிச் சென்ற இளைஞர்கள் மொத்தமாக மாறி ஒரு புதிய உருமாற்றம் கண்டிருப்பது வியக்கவைக்கிறது.
எந்தவோர் உரையையும் கேட்காமல் இந்த அறைக்குள் நுழையும் போது இந்த இளைஞர்களையும் அவர்கள் பெற்ற சாதனைகளையும் மட்டுமே பார்க்க முடிகிறது.
குறிப்பாக கொடூர கோவிட் – 19 காலத்தில் இந்த இளைஞர்களை சிறந்த மனிதர்களாக பட்டைத் தீட்டி வெற்றியாளர்களாக தலை நிமிரச் செய்திருப்பது மகத்தான பணி என்று சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹன்னா இயோ பாராட்டினார்.
நான் இந்த சாதனைகளை கை தட்டி பாராட்டுகிறேன். முக்கிய துறைகள் சார்ந்த அமைச்சர்களின் ஆதரவை திரட்டுவதற்காக நானோ அவர்களிடம் பேசுவேன் என்றும் அமைச்சர் உறுதி அளித்தார்.
கவனிக்கப்படாமல் இருக்கும் 90 விழுக்காடு இளைஞர்கள் மீது கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை ஹன்னா இயோ வலியுறுத்தினார்.
தலைமைத்துவ திட்டங்கள் வழி பலன் அடைந்திருக்கும் 10 விழுக்காட்டு இளைஞர்களிடம் காட்டும் அக்கறையை காட்டிலும் 90 விழுக்காட்டினர் மீது கவனம் செலுத்த வேண்டியது அதீத முக்கியத்துவம் வாய்ந்தது என்றார் அவர்.
தடம் மாறிய இளைஞர்களை நல்வழிப்படுத்தும் திட்டங்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவதின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சு பல தசாப்தங்களாக தன்னுடைய தலைமைத்துவ திட்டங்களில் 10 விழுக்காட்டு இளைஞர்கள் மீது மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது. எஞ்சிய 90 விழுக்காட்டு இளைஞர்கள் மீதும் கவனம் செலுத்துவதற்கு காலம் கனிந்துவிட்டது என்று அவர் தெரிவித்தார்.
மைஸ்கில்ஸ் அறவாரியத்திற்கு HSBC Malaysia காசோலை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய ஹன்னா இயோ, இவ்வங்கியின் மனித நேயத்திற்கு நன்றி சொன்னார்.
வாழ்க்கையின் புதிய இலக்கில் பயணித்துக் கொண்டிருக்கும் 650 இளைஞர்களின் உருமாற்றத்திற்கு HSBC Malaysia இதுவரை மொத்தம் 22 லட்சத்து 30 ஆயிரம் ரிங்கிட் உதவி நிதி வழங்கி இருக்கிறது.
அதே சமயத்தில் இங்குள்ள இளைஞர்களிடம் புதைந்து கிடக்கும் ஹாக்கி, ஓட்டப்பந்தயம் போன்ற விளையாட்டுத் திறன்களை கண்டுபிடிப்பதற்கு தேசிய விளையாட்டு மன்றத்துடன் பேசப்போவதாகவும் அமைச்சர் சொன்னார்.
MySkills Foundation’s partnership with HSBC Malaysia பங்காளித்துவ த்தில்125 Youths Charging Up a Greener Tomorrow with Solar PV and EV Training எனும் நிகழ்ச்சியானது அதிக தேவை உள்ள பசுமை தொழிலில் இங்குள்ள இளைஞர்கள் திறன் பெற்றிருப்பதற்கான உயர் பயிற்சிகளை வழங்குகிறது.
இந்நிகழ்ச்சியில் மைஸ்கில்ஸ் அறவாரியத்தின் இணை தோற்றுநரும் இயக்குனருமான பசுபதி சிதம்பரம், HSBC BANK Malaysia CEO Datuk Omar Siddiq ஆகியோரும் கலந்துகொண்டனர்.