ஜோகூர் மாநிலத்தில் 3.2 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம்

கோலாலம்பூர்:

இன்று காலை ஜோகூர் மாநிலத்தில் மீண்டும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அதன் அதிர்வுகள் மாநிலத்தின் பல பகுதிகளிலும் தெற்கு பாகாங்கிலும் உணரப்பட்டதாகவும் மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, ரிக்டர் அளவுகோலில் 3.2 அளவில் பதிவான இந்நிலநடுக்கம் இன்று காலை 8.59 மணிக்கு, 2.33°N, 102.79°E என்ற நில அச்சாங்குகளில் பதிவு செய்யப்பட்டது.

“நிலநடுக்கத்தின் மையப்புள்ளி ஜோகூர் மாநிலத்தின் சிகாமாட் பகுதியிலிருந்து தெற்கே சுமார் 18 கிலோமீட்டர் தூரத்தில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்தது. நிலைமையை நெருங்கிய கண்காணிப்பில் வைத்திருக்கிறோம்,” என்று அது தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது கடந்த ஒரு வாரத்தில் ஜோகூர் மாநிலத்தில் நிகழும் மூன்றாவது நில அதிர்வு நிகழ்வாகும்.

இதற்கு முன்பு, ஆகஸ்ட் 24 அன்று காலை 6.13 மணிக்கு 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியிருந்தது. அப்போது, சிகாமாட்டின் மேற்கே சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்க மையப்புள்ளி இருந்தது. அந்நேரத்தில் ஜோகூர், நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் தெற்கு பாகாங்கில் அதிர்வுகள் உணரப்பட்டன.

மீண்டும் அதே நாளில் காலை 9 மணியளவில், குளுவாங்கின் வடமேற்கே சுமார் 28 கிலோமீட்டர் தூரத்தில் 2.8 ரிக்டர் அளவிலான மற்றொரு லேசான நிலநடுக்கமும் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here