சிட்டுக்குருவிகளைக் கொல்ல உத்தரவிட்டது சரியா?

சீனாவின் மாவோஒரு வரலாற்றுப் பாடம்

சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி வருகிறது. புரட்சி செய்தபோதும், புரட்சியில் வென்று ஆட்சிக்கு வந்த பிறகும் பல மாறுபட்ட நடவடிக்கைகளை இந்தக் கட்சி முயற்சி செய்து பார்த்திருக்கிறது. அவற்றுள் ஒன்றுதான் சிட்டுக்குருவிகளை அழிக்கும் திட்டம்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டங்களில் சில வெற்றிகரமாகவும், வேறு சில படிப்பினைகளை அளித்தவையாகவும், இன்னும் சில பேரழிவை ஏற்படுத்தியவையாகவும் அமைந்திருக்கின்றன. சிட்டுக்குருவிகளை அழிக்கும் திட்டம் மூன்றாவது வகையைச் சேர்ந்தது.

சீனாவில் மாவோ தலைமையிலான ஆட்சி நிறுவப்பட்டபோது, அந்நாட்டில் வறுமை தாண்டவமாடியது. சுமார் முப்பது ஆண்டுகளாக நீடித்திருந்த உள்நாட்டுப் போரால் நாடு சின்னாபின்னமாகியிருந்தது.

சண்டைகளை மட்டுமே பார்த்து வளர்ந்து ஒரு தலைமுறை இளைஞர்கள் கூட்டம் படிப்பறிவில்லாத பாமரர்களாக இருந்தது. பெரும் சண்டைகளிலேயே தங்களது இளமைப் பருவம் முழுவதையும் தொலைத்துவிட்ட மாவோவுக்கு ஆசுவாசிப்படுத்திக் கொள்ளக்கூட கால அவகாசம் இருக்கவில்லை. அதனால் அடுத்தடுத்து பல்வேறு திட்டங்கள் அவசரமாகச் செயல்படுத்தப்பட்டன.

முதலாளி வர்க்கத்தின் பிடியில் இருந்த சீனாவை கம்யூனிசப் பாதைக்குத் திருப்புவதற்காக மாவோ மேற்கொண்ட சீர்திருத்த நடவடிக்கையில் ஒன்று முன்னோக்கிய பெரும்பாய்ச்சல். 1958-ஆம் ஆண்டில் இருந்து 1962-ஆம் ஆண்டு வரை இது நடைமுறையில் இருந்தது.

சீனா 10 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டது எப்படி?

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆவது ஆண்டு: வரலாற்றை மாற்றிய 11 முழக்கங்கள்

கூட்டுப் பண்ணை முறையில் விவசாயம் முழுவதையும் அரசின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே மாவோவின் திட்டம். தனியாக விவசாயம் செய்தவர்கள் தண்டிக்கப்பட்டார்கள். வேறு சில சீர்திருத்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நடைமுறைகளில் ஒன்றுதான் “நான்கு பூச்சிகள் இயக்கம்”. சில நேரங்களில் இதை சிட்டுக்குருவி இயக்கம் என்றும் வரலாற்று ஆசிரியர்கள் அழைக்கிறார்கள். வேறு சிலர் சிட்டுக் குருவிகளை அழிக்கும் இயக்கம் என்கிறார்கள்.

மக்கள் அனைவரும் சுகாதாரமாகவும் நலமாகவும் இருப்பதற்கு குறிப்பிட்ட நான்கு உயிரினங்கள் தடையாக இருப்பதாக மா சே துங் கருதினார். அவை எலிகள், ஈக்கள், கொசுக்கள்  சிட்டுக்குருவிகள்.

அப்போது மலேரியா, பிளேக், உள்ளிட்ட நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். நோய்களுக்கு எலிகள், ஈக்கள், கொசுக்கள் போன்றவை காரணம் என்று கருதப்பட்டது. அதனால் அவற்றை அழித்தால் மக்களை நோயிலிருந்து காப்பாற்றலாம் என்பது திட்டம். இவற்றில் சிட்டுக்குருவி எங்கிருந்து வந்தது, அது ஏன் பட்டியலில் சேர்க்கப்பட்டது என்ற கேள்வி எழலாம்.

சிட்டுக்குருவிகள் வயலில் விளையும் உணவு தானியங்களைச் சாப்பிடுவதால் உணவுப் பற்றாக்குறை ஏற்படுகிறது; விதைகளை தின்பதால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது என்ற கருத்து உருவாகியிருந்தது. அதனால் அவற்றையும் கெட்ட உயிரினங்களின் பட்டியலில் மாவோவின் அரசு சேர்த்துவிட்டது.

பட்டியலிடப்பட்ட நான்கு “கெட்ட உயிரினங்களை” ஒழிப்பதற்கு மக்கள் அனைவரும் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொண்டது. பெரும் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. இந்த நான்கு பூச்சிகளையும் கொல்வது எப்படி என்ற விளக்கத்துடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

ட்ரம் இசைக் கருவிகள், மணிகள், துப்பாக்கிகள் போன்றவற்றைப் பயன்படுத்தி பூச்சிகளை விரட்டுவது தொடர்பான துண்டுக் குறிப்புகள் வெளியிடப்பட்டன. பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மக்களும் இதற்கு ஆர்வத்துடன் ஒத்துழைப்புக் கொடுத்தார்கள். அதனால் செயல்பாட்டு அளவில் இந்தத் திட்டம் வெற்றிகரமாகவே அமைந்தது.

எலி, ஈ, கொசுவை விட சிட்டுக்குருவிகளுக்கே அதிக முக்கியத்துவம் கிடைத்தது. விவசாயிகள் தங்களது வயல்களுக்குள் தட்டுகளையும் மணிகளையும் பயன்படுத்தி ஒலி எழுப்பியபடி ஓடினார்கள். ஓவென பேரிரைச்சலுடன் கத்தினார்கள். குருவிகள் அஞ்சிப் பறந்தன.

குருவிகளின் கூடுகள் கலைக்கப்பட்டன. குஞ்சுகள் கொல்லப்பட்டன. முட்டைகள் உடைக்கப்பட்டன. உணவு கிடைக்காத குருவிகளால் பறக்க முடியவில்லை. களைத்துப் போயின. தரையில் விழுந்து மடிந்தன.

சில புள்ளி விவரங்களின்படி நூறு கோடிக்கும் அதிமான எலிகளும் சிட்டுக்குருவிகளும் கொல்லப்பட்டன. பல்லாயிரக்கணக்கான டன் அளவுக்கு கொசுக்களும் ஈக்களும் அழிக்கப்பட்டன. அந்த வகையில் நான்கு பூச்சிகள் இயக்கமானது பெருவெற்றிபெற்றதாகவே இருந்திருக்க வேண்டும்.

குருவிகளைக் கொன்றதால் ஏற்பட்ட சிக்கல்

ஆனால் மாவோவின் அரசு எதிர்பாராத விளைவுகளைச் சந்தித்தது. அந்தக் காலகட்டத்தில் சீனாவில் சிட்டுக்குருவி என்ற இனமே இல்லாத நிலைக்குச் சென்றுவிட்டதாக சில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

சிட்டுக்குருவிகள் உணவு தானியங்களையும் விதைகளையும் மாத்திரமல்ல, பயிர்களை அழிக்கும் முக்கியமான பூச்சிகளையும் உண்ணக்கூடியவை என்கிறது அறிவியல். அதனால் பயிர்களைப் பாதுகாப்பதில் சிட்டுக்குருவிகளுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது.

சிட்டுக்குருவி ஒழிப்பு இயக்கம் தொடங்கிய ஓராண்டுக்குப் பிறகு சீனாவில் ஆய்வு நடத்தப்பட்டது. இறந்துபோன சிட்டுக்குருவிகளின் உடல்களை சீனாவின் அறிவியல் ஆய்வு நிறுவனம் பரிசோதனை செய்து பார்த்தது. அவற்றின் வயிற்றில் எந்தவிதமான தானியங்களும் இல்லை. பெரும்பாலும் வயிற்றை நிரப்பியிருந்தவை அனைத்தும் பூச்சிகள்தான். தானியங்களைத்தான் சிட்டுக்குருவிகள் உண்டன என்ற கருத்து பொய்த்துப்போனது.

நான்கு கெட்ட உயிரினங்களை அழிக்கும் இயக்கம் நடந்து கொண்டிருந்தபோதே சீனாவில் பூச்சிகள் பெருகத் தொடங்கின. குறிப்பாக வெட்டுக்கிளிகள் அதிகரித்தன. சிட்டுக்குருவி வெட்டுக்கிளிகளின் எதிரி. வெட்டுக்கிளிகளை தின்னும் முக்கியமான பறவை. வயல்களில் எதிரி இல்லாததால் பெருங்கூட்டமாக வெட்டுக்கிளிகள் படையெடுத்தன. பயிர்களையும் அறுவடை நிலையில் இருந்த உணவு தானியங்களையும் தின்று அழித்தன.

உணவு தானியங்களை அழிப்பதாக சிட்டுக்குருவிகளை அழிக்கப்போய், வெட்டுக்கிளிகள் பெருகிவிட்டன. அப்போதுதான் பயிர்களையும் உணவு தானியங்களையும் காக்கும் பணியில் சிட்டுக்குருவிகள் ஈடுபட்டிருந்தது புரிந்தது. சிட்டுக்குருவி விவசாயிகளின் நண்பன் என்று உணர்ந்துகொள்வதற்கு முன்பாகவே நிலைமை கைமீறிப்போய்விட்டது.

பல்லாயிரக்கணக்கான டன் உணவு தானியங்களை வெட்டுக்கிளிகள் அழித்துவிட்டன. வறட்சி, வெள்ளம் உள்ளிட்டவை காரணமாக நெருக்கடி இன்னும் அதிகரித்தது. 1959-ஆம் ஆண்டில் நாட்டின் உணவு உற்பத்தி 15 சதவிகிதம் அளவுக்கு குறைந்துபோனதாக மதிப்பிடப்படுகிறது. அதன் பிறகு உற்பத்தி தொடர்ந்து குறைந்து கொண்டே இருந்தது. சில ஆண்டுகளில் பஞ்சத்தால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேர்ந்தது.

தாவரங்களையும் தானியங்களையும் அழிக்கும் பூச்சிகளை ஒழிப்பதில் சிட்டுக்குருவிகளின் பங்கு அரசுக்குப் புரிந்தது. நிறைவான அறுவடை நடக்க வேண்டுமானால் சிட்டுக்குருவிகள் தேவை என்பதும் உறுதியானது. அதனால் சிட்டுக்குருவிகளைக் கொல்லும் இயக்கத்தை மாவோ நிறுத்தினார். ஆனால் “நான்கு கெட்ட பூச்சிகளைக் கொல்லும் இயக்கம்” நிறுத்தப்படவில்லை. மாறாக சிட்டுக் குருவிகளுக்குப் பதிலாக மூட்டைப் பூச்சி அந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. அதற்குள்ளாக பெரும்பஞ்சம் சீனாவை வாட்டியது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100வது ஆண்டு: ஆட்சி அதிகாரத்தை தக்க வைப்பது எப்படி?

1962-ஆம் ஆண்டில் “முன்னோக்கிய பெரும்பாய்ச்சல்” இயக்கம் முடிவுக்கு வந்தது. அத்துடன் பூச்சிகளைக் கொல்லும் திட்டமும் நின்று போனது.

நீண்ட காலத்துக்குப் பிறகு 1998-ஆம் ஆண்டு அதே திட்டம் வேறு சில திருத்தங்களுடன் சீனாவில் அமல்படுத்தப்பட்டது. இப்போது சிட்டுக்குருவியும் கிடையாது மூட்டைப்பூச்சியும் இல்லை. அவற்றுக்குப் பதிலாக கரப்பான் பூச்சி பட்டியலில் இணைந்தது.

இப்போதும் 1950-களில் ஒட்டப்பட்டதைப் போன்ற சுவரொட்டிகள் காணப்பட்டன. ஆயினும் மக்கள் மத்தியில் இதற்கு பெரிய வரவேற்புக் கிடைக்கவில்லை.

இப்போதும் பெரும்பாய்ச்சல் பற்றிப் பேசும்போதெல்லாம் சிட்டுக்குருவி இயக்கமும் குறிப்பிடப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here