அவங்களை ஒழிச்சிட்டோம்; நீங்க உஷாரா இருங்க; இஸ்ரேல் பிரதமர் யாரை சொல்றாருன்னு பாருங்க!

ஜெருசலேம்: ‘ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு சில ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட தற்போது பலவீனம் ஆகிவிட்டது’ என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.

இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பான ஹமாசுக்கும் இடையே போர் நடந்து வருகிறது. ஹமாசுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது லெபனான் நாட்டில் செயல்படும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும் தாக்குதல் நடத்தியது. இதனால் ஹிஸ்புல்லா அமைப்பையும் களையெடுக்க முடிவெடுத்த இஸ்ரேல், சில நாட்களுக்கு முன் லெபனானில் தரைவழி தாக்குதலை துவங்கியது.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், இப்ராகிம் அகீல், அலி கராகி என வரிசையாக ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, ஹிஸ்புல்லா அமைப்பு தலைவர் நஸ்ரல்லாவும் கொல்லப்பட்டார். நஸ்ரல்லா அடுத்த வாரிசு ஹஷேம் சபீதின் கதையையும் இஸ்ரேல் முடித்து விட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், நஸ்ரல்லாவின் வாரிசான ஹஷேம் சபீதினை இஸ்ரேல் ராணுவம் கொன்றதை நெதன்யாகு உறுதிப்படுத்தினார்.

மேலும் அவர் கூறியதாவது:

நாங்கள் ஹிஸ்புல்லா அமைப்பை அழித்துவிட்டோம். ஹிஸ்புல்லா அமைப்பு தலைவர் நஸ்ரல்லா உட்பட ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகளை நாங்கள் கொன்றுவிட்டோம். இஸ்ரேலுக்கு தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உரிமை உள்ளது. ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு சில ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட தற்போது பலவீனம் ஆகிவிட்டது.

மாற்றத்திற்கான வாய்ப்பை லெபனான் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் இப்போது உங்கள் நாட்டைத் திரும்பப் பெற்று அமைதி மற்றும் செழிப்புக்கான பாதைக்கு திரும்பலாம். தங்கள் நாட்டின் எதிர்காலத்தை காப்பாற்ற லெபனான் மக்கள் நடவடிக்கை எடுக்கத் தவறினால் மோசமான விளைவுகள் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here