பச்சோக்:
பச்சோக் மருத்துவமனை அடுத்த மாதம் முதல் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது மாவட்டத்தில் 100,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களுக்கு சுகாதார வசதிகளை வழங்க முடியும் என்று கிளந்தான் சுகாதார இயக்குனர் டத்தோ டாக்டர் ஜைனி ஹுசின் கூறினார்.
பச்சோக் மருத்துவமனை திறப்பதன் மூலம் கோத்தா பாருவில் உள்ள ராஜா பிரம்புவான் ஜைனாப் II மருத்துவமனை மற்றும் குபாங் கெரியானில் உள்ள யுனிவர்சிட்டி சயன்ஸ் மலேசியா சிறப்பு மருத்துவமனை ஆகியவற்றில் நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும் என்று அவர் மேலும் கூறினார்.
“பச்சோக் மருத்துவமனை நவம்பரில் செயல்படத் தொடங்கும், இது உள்ளூர்வாசிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புவதாக” அவர் இன்று பச்சோக் மருத்துவமனை திட்ட ஒப்படைப்பு விழாவில் உரையாற்றியபோது சொன்னார்.
இந்த மருத்துவமனையில் 76 படுக்கைகள், இரண்டு அறுவை சிகிச்சை மையங்கள், சிறப்பு மருத்துவ மனைகள், ஒரு மகப்பேறு பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, நிர்வாக மற்றும் பயிற்சிப் பிரிவுகள் உள்ளிட்ட வசதிகள் இருக்கும் என்று அவர் கூறினார்.















