ஐதராபாத்தில் துர்கா சிலை உடைப்பு- பதட்டம்

ஐதராபாத் நம்ப பள்ளி கண்காட்சி மைதானத்தில் பிரமாண்ட துர்கா அம்மன் சிலை பிரதிஷ்டை செய்து நவராத்திரி சிறப்பு பூஜைகள் நடந்தன.

பூஜைகள் முடிந்து விழா குழுவினர் தங்களது வீடுகளுக்கு சென்று விட்டனர். அந்த நேரத்தில் மர்மநபரால் சிலையின் சில பாகங்கள் உடைக்கப்பட்டது.

மேலும் சிலை முன்பு போடப்பட்டிருந்த படையல் மலர் அலங்காரம் ஆகியவை சேதப்படுத்தப்பட்டிருந்தன. இதனை கண்ட விழா குழுவினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஏராளமானோர் அங்கு திரண்டதால் பெரும் பதட்டம் நிலவியது.

டிஜிபி அக்சன் யாதவ் தலைமையிலான  போலீஸார்  அங்கு குவிக்கப்பட்டனர். சிலையை உடைத்தவர்களை கைது செய்ய 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை  போலீஸார் ஐதராபாத் மாநகரப் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். பல இடங்களில் வாகன சோதனையும் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் துர்கா சிலையை உடைத்ததாக நாக கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணய்யா கவுடு என்பவரை தனிப்படை   போலீஸார் கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் கைது செய்யப்பட்ட கிருஷ்ணய்யா கவுடு மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது.

அவர் நள்ளிரவில் துர்கா சிலை அருகே ஏதாவது உணவு கிடைக்குமா என வந்துள்ளார். சாமி முன்பு அவருக்கு போதுமான அளவு உணவு கிடைக்காததால் ஆத்திரத்தில் சாமி சிலையை உடைத்தது தெரியவந்தது.போலீஸார்  அவரை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

விழா குழுவினர் போதிய பாதுகாப்பு வழங்கவில்லை. விடிய விடிய யாராவது ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என ஏற்கனவே கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. அதனை மீறியதாக விழாக்குழுவினர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த சம்பவத்திற்கு மத சாயம் எதுவும் பூச வேண்டாம். சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என  போலீஸார்எச்சரிக்கை விடுத்தனர். இந்த சம்பவம் நேற்று இரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here