‘2024 மடானி பட்ஜெட்’ இந்தியர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது

(பி.ஆர். ராஜன்)

மலேசிய மக்கள் வாழ்வாதாரத்தையும் சமூகப் பொருளாதார அந்தஸ்தையும் உயர்த்துவதற்கு 2024 பட்ஜெட்டில் மொத்தம் 376 நலத்திட்டங்களை அரசாங்கம் அறிவித்தது. இவற்றுள் பல்வேறு திட்டங்கள் நிறைவு பெற்றிருக்கின்றன. மேலும் பல அமலாக்கத்தில் உள்ளன.

  மக்களின் குறிப்பாக இந்திய சமுதாயத்தின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு அவர்களின் சமூகப் பொருளாதார அந்தஸ்தை உயர்த்திடும் பல்வேறு திட்டங்களையும் அரசாங்கம் அமல்படுத்தி இருக்கிறது.தெக்குன். அமானா இக்தியார் மலேசியா. மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவு (MITRA) போன்றவற்றின் மூலம் இத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்திருக்கிறது. இந்தியர்களின் குறிப்பாக பி40 பிரிவினரின் வாழ்க்கை உயர்வுக்கு நிதிச்சுமைகளைக் குறைப்பதற்கு பல்வகையான உதவித் திட்டங்களையும் மடானி அரசாங்கம் அமல்படுத்தி இருக்கிறது. தொடர்ந்து அமல்படுத்தியும் வருகிறது.

2024 பட்ஜெட்நிதி ஒதுக்கீடுகளின் வழி அமல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் வழி இந்திய சமுதாயத்திற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ மிகப்பெரிய பலன்களைத் தந்து வருகிறது. மலேசிய சமுதாயத்தின் ஓர் அங்கம் என்ற முறையில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் இந்த நலத் திட்டங்களின் வழி பயன்பெற்று வருகின்றனர் என்று சமூக ஆய்வாளர் டாக்டர் ஜி. மணிமாறன் கூறினார்.

நாட்டின் பட்ஜெட்வரலாற்றிலேயே மிகப்பெரிய ஒதுக்கீட்டை 2024 பட்ஜெட் கொண்டிருக்கிறது. இதில் இந்திய சமுதாயத்திற்கும் பெரும் பங்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதனை மறுப்பதற்கில்லை. இருப்பினும் இந்த நலத்திட்டங்களின் தாக்கம் தனிநபரின் வாழ்க்கையில் எந்த அளவுக்கு மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது என்பதை ஆய்வு செய்ய வேண்டி இருக்கிறது.

இந்திய சமுதாயத்தின் பல்வேறு தரப்பினர் அரசாங்கத்தின் ஒவ்வொரு நலத்திட்டத்தின் பலன்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். ஏழைகளின் நிதிச்சுமைகள் ஓரளவு குறைக்கப்பட்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை என்று அவர் மேலும் சொன்னார்.

ஒவ்வோர் அமைச்சின் வழியும் இந்திய சமுதாயம் குறிப்பிடத்தக்க ஒதுக்கீட்டைப் பெற்று வருகிறது. குறிப்பாக வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சு, மலேசியக் கல்வி அமைச்சு ஆகியவற்றின் மூலம் முறையே வீட்டுப் பிரச்சினைகளுக்கும் கல்வித் தேவைகளுக்கும் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சமூகப் பொருளாதார அந்தஸ்தை உயர்த்திக் கொள்வதற்கு மலேசிய இந்திய சமுதாயம் மடானி அரசாங்கத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கையை வைத்துள்ளது. முன்னேற்றப்பாதையில் மற்ற இனங்களுக்கு ஈடாக பயணிப்பதற்குப் போதுமான நிதி ஒதுக்கீடும் உதவித் திட்டங்களும் வழங்கப்படுவதை 2024 பட்ஜெட் உறுதி செய்திருக்கிறது என்று டாக்டர் மணிமாறன் குறிப்பிட்டார்.

இந்நிலையில் வரும் 2025 பட்ஜெட்டில் இந்திய சமுதாயத்தின் சமூகப் பொருளாதார அந்தஸ்தை இன்னும் ஓர் உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்வதற்கு கூடுதல் நிதியும் உதவித் திட்டங்களும் வழங்கப்படும் என்று இந்திய சமுதாயம் குறிப்பாக பி40 பிரிவினர் எதிர்பார்க்கின்றனர்.

தங்களுடைய வாழ்வாதார உயர்வுக்கு மடானி அரசாங்கம் கூடுதல் கவனமும் அக்கறையும் கொள்ள வேண்டும் என்று இந்திய சமுதாயம் எதிர்பார்க்கிறது.
2024 மடானி பட்ஜெட்டின் கீழ் இந்திய சமுதாயம் மேலும் அவர்களின் பிள்ளைகளின் நலன் காக்கப்பட்டிருக்கிறது. பள்ளித் தொடக்கத்தில் வழங்கப்படும் உதவி நிதி பள்ளிப் பேருந்துக் கட்டணம் போன்றவை அதில் அடங்கும் என்று டாக்டர் மணிமாறன் தெரிவித்தார்.

மேலும் எஸ்டிஆர் எனப்படும் ரஹ்மா ரொக்க உதவித் திட்டத்தின் கீழ்
இந்திய சமுதாயம் குறிப்பாக பி40 பிரிவினர் மிகப்பெரிய பலனைப் பெற்றுள்ளனர். 2022இல் அதிகப்பட்சமாக 2,500 ரிங்கிட்டாக இருந்த எஸ்டிஆர் 2024இல் 3.700 ரிங்கிட்டாக உயர்வு கண்டது.

சாரா உதவித் திட்டத்தின் கீழ் 1,200 ரிங்கிட் மாதம் 100 ரிங்கிட்டாக மைகார்டில் சேர்க்கப்பட்டிருக்கிறது.வறிய ஏழைகளுக்கு மின்சாரக் கட்டணத்தில் மானியம், பாயோங் ரஹ்மா என்ற இலவச உணவுப்பொருள் திட்டம் ஆகியவை ஏழைகளின் நிதிச் சுமையைக் குறைப்பதற்கு உதவி இருக்கிறது. மொத்தத்தில் 2024 மலேசிய மடானி பட்ஜெட் ஏழைகள், வசதியற்றவர்கள் வாழ்க்கை நிலையை மாற்றி அமைத்திருக்கிறது.

மேலும் அரசாங்க உதவித் திட்டங்கள் அனைத்தும் விரல்நுனியில் இருக்கும்படி அரசாங்கம் ஏற்பாடுகளைச் செய்திருப்பது இந்த உதவித் திட்டங்களில் இருந்து யாரும் விடுபட்டு விடக்கூடாது என்பதை உறுதி செய்திருக்கிறது என்று டாக்டர் மணிமாறன் கூறினார்.

இந்திய தொழில்முனைவோரின் உயர்வுக்கும் வளர்ச்சிக்கும் தெக்குன் வழி 50 மில்லியன் ரிங்கிட் 2024 பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று மித்ராவழி பி40 இந்தியர்களின் சமூகப் பொருளாதாரத்தை உயர்த்திடுவதற்கு 100 மில்லியன் ரிங்கிட்டையும் ஒதுக்கி இருக்கிறது என்பதையும் டாக்டர் மணிமாறன்சுட்டிக்காட்டினார்.

2024 மடானி பட்ஜெட்டின் கீழ் இந்திய சமுதாயத்தின் நலன்கள் காக்கப்பட்டிருக்கிறது என்பது திட்டவட்டமான உண்மையாகும்.
மடானி பொருளாதாரம் மக்களின் வாழ்க்கையை வளப்படுத்துகிறது.


“மடானி பொருளாதாரத்தின் நோக்கமும் இலக்கும் மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்திப் பிடிப்பதாகும். பொருளாதாரத்தை மறுகட்டமைப்புச் செய்து ஆசியப் பிராந்தியத்தில் மலேசியாவைக் கோலோச்ச வைப்பது” – -பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here