கோலாலம்பூர்:
நாட்டில் தொடர்ந்து நிலவிவரும் தீவிர காற்று மாசுபாடு நெருக்கடி காரணமாக நாடு முழுவதும் 30 கண்காணிப்பு நிலையங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளதாகச் சுற்றுச்சூழல் துறை அறிவித்துள்ளது.
எல் நினோ பருவநிலை தாக்கம், குறைந்த மழைப்பொழிவு, திறந்த வெளியில் குப்பைகளை எரித்தல் போன்ற நடவடிக்கைகள் ஏற்பட்டுள்ள இந்தச் சூழலில், சரவாக் மாநிலம் இதில் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாகச் செரியான், ஸ்ரீ அமான் பகுதிகளில் காற்று மாசுபாட்டுக் குறியீடு 180 தாண்டி மிகவும் கவலைக்கிடமான அளவை நெருங்கியுள்ளது.
இதற்கிடையில், கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதிகள் மற்றும் புத்ராஜெயா உள்ளிட்ட தீபகற்ப மலேசியாவிலும் புகைமூட்டம் பரவியுள்ளதுடன், ஷா ஆலம், பேராக், ஜோகூர், நெகிரி செம்பிலான் மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் 150-கும் மேல் பதிவாகியுள்ளது.
எனவே, முதியவர்கள், சிறுவர்கள், சுவாசக் கோளாறு உள்ளவர்கள் தேவையற்ற வெளியிட பயணங்களைத் தவிர்க்குமாறும், பாதுகாப்பு முகக்கவசங்களைப் பயன்படுத்துமாறும், திறந்தவெளியில் குப்பைகளை எரிப்பதைத் முற்றிலுமாகத் தவிர்க்குமாறும் அமைச்சு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
























