மகளை சிறைபிடித்தது உகாண்டா: இந்திய தொழிலதிபர் ஐ.நா.,வில் புகார்!

கம்பாலா : சுவிட்சர்லாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளி தொழிலதிபர் பங்கஜ் ஒஸ்வாலின் மகள் வசுந்தரா உகாண்டாவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை விடுவிக்கக்கோரி பங்கஜ் ஐ.நா.,வில் முறையிட்டுள்ளார்.

ஒஸ்வால் அக்ரோ மில்ஸ் மற்றும் ஒஸ்வால் கிரீன்டெக் ஆகிய நிறுவனங்களை தோற்றுவித்த மறைந்த பிரபல தொழிலதிபர் அபய்குமார் ஒஸ்வால் மகன் பங்கஜ். இந்தியாவில் பிறந்த இவர், கர்நாடகாவில் உள்ள மணிபால் தொழில்நுட்ப மையத்தில் பட்டம் பெற்று தந்தை நிறுவனத்தில் இணைந்தார். இதன் பிறகு தொழிலை விரிவாக்கம் செய்ய துவங்கினார். இதன் காரணமாக பெட்ரோ கெமிக்கல், ரியல் எஸ்டேட், உரம் மற்றும் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ள ‘ஒஸ்வால் குரூப் குளோபல்’ நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.

இந்த நிறுவனத்தின் கீழ் செயல்படும் பிஆர்ஓ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக, பஞ்கஜ் மகள் வசுந்தரா, 26, உள்ளார். இந்த நிறுவனம் உகாண்டாவில் மிகப்பெரிய எத்தனால் தொழிற்சாலையை அமைத்து உள்ளது. மேலும் மேற்கு ஆப்ரிக்காவில் சுரங்க தொழிலில் ஈடுபடும் நிறுவனத்தையும், ஆஸ்திரேலியாவில் உரம் தயாரிக்கும் தொழிற்சாலையையும் அமைத்துள்ளது.

இந்நிலையில், உகாண்டாவின் லுவேரோ என்ற நகரில் அமைந்துள்ள தொழிற்சாலையில் வசுந்தரா பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 1ம் தேதி, ஆயுதங்களுடன் உள்ளே புகுந்த 20 பேர், வசுந்தராவை பிடித்துச் சென்றனர். தங்கள் யார் என்பதை தெரிவிக்காத அவர்கள், பிடித்து செல்வதற்கான காரணத்தையும் கூறவில்லை.

அதேநேரத்தில், அவரது குடும்பத்தினருக்காக உகாண்டாவில் பணியாற்றிய முகேஷ்குமார் மெனாரியா என்ற சமையல் கலைஞரை கொலை செய்யும் நோக்கத்துடன் கடத்தி சென்றதாக அளிக்கப்பட்ட புகாரின் கீழ், வசுந்தராவும், அவரது நிறுவனத்தின் வழக்கறிஞரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

இது தொடர்பாக வசுந்தரா இன்ஸ்டாகிராம் சமூக வலைளதளத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு, ‘தான் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளேன். காலணிகள் நிரம்பிய அறையில் இருக்கிறேன். குளிக்கவோ, உடைமாற்றவோ கூட அனுமதிக்கப்படவில்லை. கழிப்பறை மோசமாக உள்ளது. சுத்தமான உணவும், குடிநீரும் தரப்படவில்லை’ எனக் குற்றம் சாட்டி உள்ளார்.

தங்களிடம் மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியாக வசுந்தராவை மர்ம நபர்கள் கடத்தி சென்றுள்ளதாக குடும்பத்தினர் கூறியுள்ளனர். நீதிமன்றம் உத்தரவிட்டும் அவர் விடுதலை செய்யப்படவில்லை எனவும் கூறுகின்றனர்.

வசுந்தரா தாயார் ராதிகா, உகாண்டா அரசுக்கு விடுத்த கோரிக்கையில், ‘எனது மகளுக்கு அடிப்படை மனித உரிமைகள் மற்றும் வசதிகள் கூட வழங்கப்படவில்லை. அவர் அப்பாவி. அவர் பாதுகாப்புடன் விடுவிக்கப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்’ எனக்கூறியுள்ளார்.

இந்நிலையில், ஐ.நா.,வின் கீழ் செயல்படும் சட்டவிரோத தடுப்புக்காவல் குறித்து விசாரிக்கும் குழுவில், வசுந்தராவை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி அவரது தந்தை பங்கஜ் ஒஸ்வால் முறையிட்டு உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here