“பதிவை வெளியிட்டவர் மட்டுமன்றி அதனைப் பகிர்ந்தவர்கள், வதைக்குத் தூண்டும் வகையில் கருத்துகளை வெளியிட்டவர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவர்.வழங்கும் புகாரில் உறுதி, தெளிவு. உண்மை, நம்பகத்தன்மையும் கொண்டிருக்க வேண்டும்”
செந்தூல் மாவட்ட காவல்துறை குற்றப்பிரிவு விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் குமரனுடன் மக்கள் ஒசை சந்திப்பு
(ராமேஸ்வரி ராஜா, பிரகாஷ் வேலு)
காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணியில் சேர்ந்து தனது அயராத உழைப்பினாலும் சிறந்த சேவைகளினாலும் இன்று செந்தூல் மாவட்ட காவல்துறை குற்றப்பிரிவு விசாரணை அதிகாரியாகப் பணிபுரிகிறார் இன்ஸ்பெக்டர் குமரன் கிருஷ்ணன்.
அண்மையில் டிக்டாக் இணையதளப் பகடிவதை (சைபர் புல்லிங்) சம்பவத்தில் தற்கொலை செய்துகொண்ட ஓர் இந்தியப் பெண் தொடர்பான விசாரணையை மேற்கொண்டு அது சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்திய முக்கியப் பொறுப்பை அவர் வகித்திருந்தார்.
காவல்துறையின் பல பிரிவுகளில் தனது சேவையை வழங்கி அனுபவம் பெற்றிருக்கும் இன்ஸ்பெக்டர் குமரன், இணையதளப் பகடிவதையால் ஏற்படும் விளைவுகள், பாதிக்கப்படுபவர்கள் எவ்வாறு புகார் செய்வது. யாரை அணுகலாம் போன்ற விவரங்களை மக்கள் ஒசையின் நேர்காணலில் பகிர்ந்து கொண்டார்.
சிஐடி என அழைக்கப்படும் குற்றப்பிரிவு விசாரணை அதிகாரியாக அண்மைய டிக்டாக் இணையதளப் பகடிவதை தற்கொலை சம்பவத்தில் எனது உழைப்பு முழுமையாக இருந்தது. விசாரணைகள் மேற்கொண்ட அளவில் இந்தப் பகடிவதைச் சம்பவங்கள் இரண்டு காரணங்களுக்காக நடத்தப்படுகின்றன. ஒன்று தனிப்பட்ட தேவை. பகை போன்ற காரணங்களுக்காகவும் மற்றொன்று பணம் சம்பாதிக்கும் நோக்கத்திற்காகவும் நிகழ்த்தப்படுகிறது என குமரன் குறிப்பிட்டார். முதல் காரணத்தைப் பொறுத்தவரை வர்த்தக எதிரிகள், குடும்பப் பகை போன்ற தனிப்பட்ட பிரச்சினை. தேவைகளுக்காக அரங்கேற்றப்படுகின்றன. இதனால் குடும்ப அளவில் பல பிரச்சினைகளும் எழுந்துள்ளதைப் பார்த்திருக்கிறோம்.
இரண்டாவது காரணத்தைப் பார்த்தோமேயானால் ஒரு தொழிலாகவே செய்வார்கள். ஒருவரை எதிர்க்க இன்னொருவரிடம் பணம் வாங்கிக்கொண்டு எந்த அளவிற்கு எதிர்மறையான பேச்சுகள். கொச்சை வார்த்தைகள் பிரயோகப்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு அதில் இறங்குவார்கள். அதிலும், தங்களின் பதிவிற்கு அதிகப்படியான லைக்குகள், பார்வையாளர்கள், பின்பற்றுபவர்கள் (Followers). பரிசுகள் (Gift)கிடைக்க வேண்டும் என்பதற்காக எந்த எல்லை வேண்டுமானாலும் செல்வார்கள்.
ஒருவர் குறித்து இன்னொருவர் தாக்கும் சம்பவங்களுக்கு ஆதரவு கருத்துகளைத் தெரிவிப்பது. அவர்களின் பக்கத்தைச் சென்று பார்ப்பது. பகிர்வது. ஊக்கப்படுத்துவது. லைக் கொடுப்பதன் வாயிலாக உடந்தையாக இருப்பவர் பலரும் உண்டு. இதனைப் பயன்படுத்திக்கொண்டு வணிகரீதியிலான ஒரு செயல்பாட்டை சம்பந்தப்பட்ட தரப்பினர் மேற்கொள்கின்றனர் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
இதுபோன்ற பதிவுகளை விரும்பாதவர்கள்கூட அதைப் பார்ப்பதுண்டு. ஆனால் இந்த சமூக வலைத்தளங்களில் அனைத்து பதிவுகளினூடே புகார் (Report post) என்கின்ற ஒரு பகுதியும் இணைக்கப்பட்டிருக்கிறது. அதில் புகார் செய்து பதிவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்பதை மறந்து விடுகிறார்கள். அல்லது அதைக் கவனிப்பதே இல்லை.
ஓர் அசம்பாவிதம் நடந்த பிறகு பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக புகார் அளிக்க பலரும் வருகின்றனர். புகார் அளிப்பதை வரவேற்கிறோம். அவசியம் பொதுமக்கள் இதற்குத் துணை நிற்க வேண்டும். அதே வேளையில், உச்சகட்ட எல்லை அல்லது விபரீதம் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. பாதிக்கப்பட்ட பலரும்கூட உடனடி நடவடிக்கைகளில் ஈடுபடாமல் விஷயம் பூதாகரமாக மாறிய பின்னரே போலீஸ் புகார் அளிக்கின்றனர். அதிலும் நிறைய பேர் பயத்தினாலும் அல்லது வேறு காரணங்களினாலும் புகார் அளிப்பதே இல்லை. அல்லது அளித்த புகாரை பலர் மீட்டுக்கொள்வதுண்டு.
புகார் என வரும்பொழுது. அவசியம் முக்கிய ஆதாரங்கள் தேவை. சட்ட நடவடிக்கைக்குத் தேவையான, ஏற்றவாறு ஆதாரங்களைத் திரட்டியாக வேண்டும். ஆதாரத்தைக் காட்டத் தயங்கும் புகார்தாரர் பலரும் உண்டு. அதிலும் அண்மையில் நிகழ்ந்த பகடிவதைக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்ட இந்தியப் பெண் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டுவதில் பெரும் சவால் ஏற்பட்டது. புகார் அளிப்பவர்கள் பலரும் ஏற்கெனவே இன்னொருவரால் பகிரப்பட்ட கொடுத்த காணொளிகளைத்தான் மீண்டும் மீண்டும் காட்டினார்களே தவிர அதில் அவர்கள் எதிர்பார்க்கும் தண்டனைக்கு உரிய ஆதாரங்களைக் கொடுக்கத் தவறினர்.
அதிலும் பாதிக்கப்பட்டவர் உயிருடன் இல்லாத நிலையில் ஆதாரங்கள் ஒப்படைப்பு. வாக்குமூலம் திரட்டு, சாட்சியங்கள் அடிப்படையில் ஒரு புகாருக்கு நடவடிக்கை எடுப்பதிலும் விசாரணை செய்வதிலும் பெரிய சவாலை சந்திக்க வேண்டியுள்ளது. சட்ட ரீதியிலான புரிதல் இல்லாத காரணத்தினால் பலரும் தண்டனை குறித்து விமர்சனங்களை எழுப்பினர். ஒரு புகாருக்கோ, தண்டனைக்கோ தகுந்த ஆதாரங்கள் முக்கியம் என்பதை அனைவரும் உணர வேண்டும் என்பதை குமரன் வலியுறுத்தினார்.
விசாரணை என வரும்பொழுது புகாரின் அடிப்படையில் ஓர் இணையதளப் பகடிவதைச் சம்பவத்தில் பதின வை வெளியிட்டவர் மட்டுமன்றி அதனைப் பகிந்தவர்கள், வதைக்குத் தூண்டும் வகையில் கருத்துகளை வெளியிட்டவர்கள் போன்றோரும் உட்படுத்தப்படுவர் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.
இச்சம்பவங்களில் நமது சமுதாயத்தைச் சார்ந்த புகார்களையே காவல்துறை அதிகம் பெறுகிறது. இந்த இணையதளப் பகடிவதைக்கு நமது பெண்கள் இதுவரை 3 பேர் தற்கொலை செய்துகொண்டு பலியாகியுள்ளனர். இனி இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க இணைய பயனர்கள் தங்களின் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும். இணையத்தை பொறுப்புடன் சரியான தேவைக்குப் பயன்படுத்த வேண்டும்.
வரும் முன்னர் காப்போம் என்பதற்கு ஏற்றவாறு உரிய புகார்களைத் தகுந்த ஆதாரங்களுடன் விரைந்து செய்யும் அதே வேளையில் வழங்கும் புகாரில் உறுதி, தெளிவு. உண்மை, நம்பகத்தன்மையையும் கொண்டிருக்க வேண்டும் எனவும் இன்ஸ்பெக்டர் குமரன் கேட்டுக்கொண்டார்.









