தங்கும் விடுதி ஊழியர்களிடம் ஆயுதம் ஏந்திய கொள்ளை; ஏழு மணி நேரத்திற்குள் தட்டித்தூக்கிய போலீஸ்

கோல திரெங்கானு:

கோல திரெங்கானு மாவட்டத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் உள்ள ஊழியர்களிடம் கத்தி போன்ற ஆயுதம் ஏந்திக் கொள்ளையடித்தது தொடர்பில், புகார் கிடைத்த ஏழு மணி நேரத்திற்குள் போலீசார் வெற்றிகரமாக சந்தேக நபரை கைது செய்தனர்.

அதிகாலை 4.20 மணியளவில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில், போலீசாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து,24 வயது மற்றும் வேலையில்லாத சந்தேக நபர், காலை 11 மணியளவில் மாராங் மாவட்டத்தில் வைத்து கைது செய்யப்பட்டார் என்று, கோல திரெங்கானு மாவட்ட காவல்துறை தலைவர் துணை ஆணையர் அஸ்லி முகமட் நூர் கூறினார்.

ஆரம்பகட்ட விசாரணையின் விளைவாக, சந்தேக நபர் கத்தி போன்ற ஆயுதம் ஏந்தி, குறித்த ஹோட்டல் ஊழியரிடம் 6,600 ரிங்கிட் கொள்ளையடித்து, தப்பிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிள், ஹெல்மெட் மற்றும் ஒரு கத்தி மற்றும் 5,180 ரிங்கிட் பணம் மற்றும் கொள்ளையடித்த பணத்தின் ஒரு பகுதியை டெபாசிட் செய்த ரசீதையும் பறிமுதல் செய்தோம் என்று அவர் சொன்னார்.

“ஆயுதம் தாங்கிய கொள்ளைக்கான தண்டனைச் சட்டம் பிரிவு 392/397 இன் படி இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது, இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி தண்டனை விதிக்க வழிசெய்கிறது” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here