கெப்போங்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பயணித்த கார், தடுமாறி அங்குள்ள நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில், தீயணைப்பு வீரர்கள் திறமையாக செயற்பட்டு, பாதிக்கப்பட்ட மூவரையும் பாதுகாப்பாக மீட்டனர்.
தாமான் புசாட் கெப்போங்கில் உள்ள புலாத்தான் மெர்கஸ்டுவாவில் நடந்த இந்த விபத்து தொடர்பில், இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 4) மதியம் 12.40 மணிக்கு கோலாலம்பூர் நகர தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு அழைப்பு வந்தது.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் ஏறக்குறைய நீரில் மூழ்கிய ஒரு காரையும், பாதிக்கப்பட்ட மூவரும் மிதக்க வாகனத்தைப் பிடித்துக் கொண்டிருப்பதையும் கண்டனர்.
“காரில் பயணித்த இரண்டு பெரியவர்கள் காயமடையவில்லை, ஆனால் மூன்று வயது குழந்தைக்கு லேசான காயம் ஏற்பட்டது. குறித்த மூவரும் வெளிநாட்டவர்கள் என்று நம்பப்படுகிறது.
“அவர்கள் அனைவரும் 1 மணியளவில் மீட்கப்பட்டனர் மற்றும் காயமடைந்த குழந்தை சிகிச்சைக்காக கோலாலம்பூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது” என்று தீயணைப்புத்துறை இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.









