குடும்ப நன்மை, கணவன்- மனைவி ஒற்றுமைக்காக கடைபிடிக்கப்படும் விரதங்களில் ஒன்று தான் கேதார கெளரி விரதம். பார்வதி தேவி 21 நாட்கள் இந்த விரதத்தை கடைபிடித்து, சிவ பெருமானின் இடப்பாகத்தை பெற்று, அர்த்தநாரீஸ்வரர் திருக்கோலம் பெற்றது இந்த விரதத்தால் தான். கவுரி என்பது பார்வதிதேவியின் மற்றொரு பெயர். ஈசனை நோக்கி அன்னை விரதம் இருந்ததால் இந்த விரதத்திற்கு ‘கேதார கவுரி’ விரதம் என்று பெயர் ஏற்பட்டது. அதனால் பெண்கள் இந்த விரதத்தை கடைபிடித்தால் கணவனை எப்போதும் பிரியாமல் இருக்கும் வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
தீவிர சிவபக்தரான பிருகு முனிவர், சிவனையல்லாது வேறு எந்த தெய்வத்தையும் வணங்கமாட்டார். இதனால் , நாரதர் கலகத்தால்… முனிவர் வரும் வேளையில் சக்தி தேவி, சிவன் அருகில் மிக நெருக்கமாக உக்காந்திருந்தார். இதைக் கண்ட பிருகு முனிவர், வண்டாக மாறி சிவனை மட்டும் வணங்கி சென்றார். தன்னை பிருகு முனிவரும் சிவனும் அவமானப்படுத்தியதாக எண்ணி கோபத்துடன் பூலோகம் வந்தார் பார்வதி தேவி. சிவனுடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டால் தான் தானும் சிவனும் ஒன்றாவோம் என நினைத்து வயல்வெளி நிறைந்த கேதாரம் என்ற இடத்தில் கடுந்தவமிருந்து சிவனிடம் சரிபாதி உடலை வாங்கி அர்த்தநாரீஸ்வரராக அவதாரமெடுத்தனர்.
பார்வதி தேவி 21 நாட்கள் கடைபிடித்த இந்த விரதத்தை எவர் ஒருவர் கடைபிடிக்கிறார்களோ அவர்களுக்கு வேண்டிய வரங்களை கெளரி அருளிடுவாள் என்பது நம்பிக்கை. 21 நாட்கள் விரதம் இருக்க முடியாதவர்கள் நிறைவு நாளான ஐப்பசி அமாவாசை தினம் அன்று விரதம் இருந்து வழிபடுவது சிறப்பு. இந்த ஆண்டு கேதார கெளரி விரதம் நவம்பர் 01ம் தேதியான இன்று கடைபிடிக்கப்படுகிறது. அனைத்து தேவ, தேவிகளை வழிப்பட்டால் கிடைக்கும் பலன்கள் அத்தனையும் கவுரிதேவியை வழிபட கிடைக்கும்.
கேதார கௌரி விரதம் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் சுக்ல பட்ச அஷ்டமி திதியில் ஆரம்பித்து, தீபாவளி அமாவாசை அன்று முடிக்க வேண்டும். அம்பாளின் வேண்டுகோளிற்கு இணங்க ஆசுதோஷியாகிய சிவன் மிக விரைவாகவே வரம் கொடுத்து விடுவார் என்பது ஐதீகம். சிவ பெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் கேதார கௌரி விரதமும் ஒன்று. இந்நாளில் விரதமிருப்பவர்கள், வீட்டை சுத்தம் செய்து, தலை குளித்து நாள் முழுக்க எச்சில்கூட விழுங்காமல் உபவாசமிருந்து, அரிசி, வெல்லத்தினால் செய்த அதிரசம், 21 எண்ணிக்கையில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள் கிழங்கு, நோன்புக்கயிறு, பழுத்த செவ்வரளி இலை, செவ்வரளி மொட்டு வைத்து கோவிலுக்கு சென்று அர்த்தநாரீஸ்வரரை வணங்கி, வீட்டில் வடை, கொழுக்கட்டை, சுய்யம், சாப்பாடு என படையல் போட்டு ஓம் நமசிவாய மந்திரம் ஜபித்து, அர்த்தநாரீஸ்வரராய், சிவசக்தி வடிவத்தை மனதில் தியானம் செய்து மாலை பிரதோஷ காலத்தில் நோன்பை நிறைவு செய்ய வேண்டும்.
நோன்பின் முடிவில் நோன்புக்கயிறை அனைவரும் கட்டிக் கொள்ள வேண்டும். பெண்கள் கழுத்திலும், ஆண்கள் கைகளிலும் கட்டிக் கொள்ள வேண்டும். அம்பிகைக்கு நைவேத்தியம் செய்த பலகாரங்களை அந்த வீட்டினரே சாப்பிட வேண்டும். நோன்புக் கயிறை எக்காரணம் கொண்டும் தொலைத்து விடக்கூடாது., மூன்று அல்லது ஐந்து நாட்கள் கழித்து நோன்பில் வைத்து சாப்பிட்ட பலகாரம், கயிறு, வெற்றிலை, பாக்கு, பூக்கள் ஆகியவற்றை ஆற்றில் விட்டு விட வேண்டும். கெளரி நோன்பு எடுக்கும் வழக்கம் இல்லாதவர்கள், வீட்டிலேயே எளிமையாக அம்மனை நினைத்து, வீட்டில் விளக்கேற்றி வழிபடலாம்.




















