ஈப்போ: கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் பஞ்சாரன் தித்திவாங்சா ஓய்விட பகுதிக்கு அருகே ஒரு புலி லோரி மீது மோதியதில் பலியாகியுள்ளது. பேராக் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறை (பெர்ஹிலிடன்) இயக்குனர் யூசஃப் ஷெரீஃப், சனிக்கிழமை (நவம்பர் 9) காலை 9 மணிக்கு இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்தது.
இந்த சம்பவத்தில் புலியின் உடல் சிதறியதாகவும் இச்சம்பவம் வைரலாகி வருவதாகவும் கூறினார். அவ்விடத்திற்கு சென்ற கெரிக் அதிகாரிகள் தகவலைச் சரிபார்த்தனர் என்று அவர் கூறினார். புலியின் உடல் சிதறியதால் அது ஆணா பெண்ணா என்பதை அடையாளம் காண முடியவில்லை.
எங்களால் அதன் எடையைக் கூட மதிப்பிட முடியவில்லை என்றும் ஆனால் அது ஒரு வயதான புலி என்று நம்புகிறோம் என்று அவர் கூறினார். எங்கள் விசாரணையில் அதிகாலை 5.30 மணியளவில் புலி ஒரு லோரியில் மோதியது தெரியவந்தது. சாலையில் புலியைக் கண்டதும், வாகனத்தை சரியான நேரத்தில் நிறுத்த முடியவில்லை என்று அதிகாரிகளிடம் ஓட்டுநர் தெரிவித்தார்.
இதற்கிடையில், புலியின் சடலத்தின் தோல், கோரைப் பற்கள், எலும்புகள், நகங்கள் அல்லது மீசை முடி போன்ற பாகங்களை எடுத்த நபர்கள், தங்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காக அவற்றை உடனடியாக பெர்ஹிலிடனிடம் ஒப்படைக்க வேண்டும். எஞ்சிய பாகங்களை சேகரித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளோம் என்றார்.
வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், மலாயா புலிகளின் பாகங்களை வைத்திருப்பவர்கள் கண்டறியப்பட்டால், குறைந்தபட்சம் 150,000 ரிங்கிட் அபராதம் மற்றும் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று யூசஃப் மேலும் கூறினார். புலிகளின் உதிரிபாகங்களை எடுத்ததற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடிக்கவும் தகவல்களைச் சேகரிக்கவும் போலீசாருடன் இணைந்து பணியாற்றி வருகிறோம் என்றார் அவர்.