புத்ராஜெயா:
போக்குவரத்து அமைச்சின் நவம்பர் மாதத்திற்கான ஒன்றுகூடல் நிகழ்வையும் சகாயா காசே மடானி நிகழ்ச்சியையும் நவம்பர் 7ஆம் தேதி வியாழக்கிழமை போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

அமைச்சு செயல்படுத்திய மக்களுக்கான திட்டங்களின் அடைவு நிலையை மதிப்பீடு செய்யக்கூடிய வாய்ப்பாக இந்த ஒன்றுகூடும் நிகழ்ச்சி அமைந்திருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

இன்னும் சிறந்த சேவைத் திட்டங்களை மக்களுக்கு வழங்கக்கூடிய ஒரு களமாகவும் இந்த நிகழ்ச்சி அமைகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார். கடந்த வாரம் தீபத்திருநாளைக் கொண்டாடிய அமைச்சின் பணியாளர்களுக்கும் வாழ்த்துக் கூறுவதாக அவர் தெரிவித்தார். உங்கள் அனைவருக்கும் அர்த்தமுள்ள மகிழ்ச்சியையும் சுபிட்சத்தையும். இத்தீபத்திருநாள் கொண்டு வந்திருக்கிறது என்று அவர் கூறினார்.

பிரதான திட்டங்கள்
நாட்டின் போக்குவரத்துத்துறையின் அடைவு நிலையை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பையும் ஒருங்கிணைப்பையும் சமச்சீரான தன்மையையும் மேம்படுத்துவதற்கும் புதிய திட்டங்களை அமல்படுத்துவதில் கடந்த 2 மாதங்களாக போக்குவரத்து அமைச்சு முனைப்புடன் செயல்பட்டிருக்கிறது என்று அமைச்சர் அந்தோணி லோக் குறிப்பிட்டார். நாட்டின் போக்குவரத்துத்துறையை மேம்படுத்துவதற்கான முக்கியக் களமாகவும் இந்தப் புதிய செயல்திட்டங்கள் அமைந்திருந்தன என்றும் அவர் சொன்னார்.

மிரோஸ் அமைப்பு நடத்திய ஆசிய சாலைப் பாதுகாப்பு மாநாட்டில் நிபுணர்கள் உட்பட ஆயிரம் பேர் பங்கேற்றனர். 2024 கூட்டு விமானப் போக்குவரத்து பாதுகாப்புக் கருத்தரங்கில் 180 பேர் பங்கேற்றனர். இதனை பிஎஸ்கேயு, எம்ஏஎச்பி கூட்டாக இணைந்து நடத்தின. விமானத் தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்றனர். ஆகாயப் பிரிவு நடத்திய தேசிய விமானப் போக்குவரத்து ஆலோசனை மன்றக் கூட்டத்தில் 80 பேர் பங்கேற்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார். இப்படி மேலும் சில மாநாடுகளும் கருத்தரங்குகளும் நடத்தப்பட்டு அவற்றுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்ததாக அவர் சொன்னார்.

மிரியில் மடானி ராக்யாட் சரவாக் கூ சாயாங் எனும் திட்டத்தையும் அமைச்சு மக்களுக்காக நடத்தியது. மிரியில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. அதேபோல் கோத்தா கினாபாலுவில் மடானி ராக்யாட் சயாங்கி சபா எனும் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அமைச்சு நடத்திய கம்போங் அங்காட் மடானி நிகழ்ச்சி, கம்போங் ஓராங் அஸ்லி இங்ஙோய் இங்ஙோய், பந்தாய், சிரம்பான் நெகிரி செம்பிலானில் நடத்தப்பட்டது. இது பழங்குடி கிராமத்தைத் தத்தெடுக்கும் திட்டமாகும்.

11 கட்டுமானத் திட்டங்களும் கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்தும் திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக 2.3 மில்லியன் ரிங்கிட் செலவிடப்பட்டது. போக்குவரத்து அமைச்சின் மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கட்டமைப்பு வசதித் திட்டங்கள் மூலம் அந்தக் கிராம மக்கள் நன்மை அடைவார்கள் எனவும் அவர் சொன்னார். சிரம்பான் மாநகரம், ஈப்போ, ஜோகூர்பாருவில் உள்ள பஸ்.மை திட்டம் மலாக்கா மாநகருக்கும் விரிவுபடுத்தப்பட்டது, பஸ்.மை மலாக்கா திட்டத்தில் 51 பஸ்கள் சேவையில் ஈடுபட்டுள்ளன.

பொது போக்குவரத்தைப் பயன்படுத்த மலாக்கா மக்களை ஊக்குவிக்கும் வகையில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்றும் அவர் கூறினார்.










