பாம்பன் பாலத்தில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டம்

இராமேசுவரம்:

லங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்களையும் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி, நூற்றுக்கணக்கான மீனவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் இராமேசுவரம் பாம்பன் பாலத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 12) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சில நாள்களுக்குமுன் ராமேசுவரத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கைக் கடற்படை அவர்களைக் கைதுசெய்தது.

அவர்கள் அனைவரையும் இம்மாதம் 25ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவர்களை விடுவிக்க வலியுறுத்தி, அப்பகுதி மீனவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பாம்பன் பாலத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பாலத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். மீனவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பேசிய மீனவர் சங்கத் தலைவர்களில் ஒருவரான சகாயம், “கடலுக்குச் சென்றால் மட்டுமே மீனவர்களால் ஒரு நாளைக்கு 1,000 முதல் 1,500 ரூபாய் வருமானம் ஈட்ட முடியும். ஆனால், இலங்கை அரசாங்கம் அவர்களைக் கைதுசெய்து, ரூ.50,000 முதல் ரூ.200,000 வரை அபராதம் விதிக்கிறது. ஏழை மீனவர்களால் அவ்வளவு பெரிய தொகையை எவ்வாறு செலுத்த முடியும்? இத்தகைய தண்டனைகளைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,” என்று வலியுறுத்தினார்.

பாரம்பரிய மீன்பிடி உரிமையைப் பெற்றுத் தருவதாகப் பல கட்சிகள் கூறிவந்தாலும், அதன் தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மீனவர் சங்கத் தலைவர்கள் சாடினர்.

இந்நிலையில், மூன்று மாதங்களுக்கும் மேலாக இலங்கைச் சிறையில் வாடிவரும் பாம்பன் நாட்டுப்படகு மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி பல போராட்டங்களை நடத்தியும் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட மீனவர் ஒருவரின் குடும்பத்தைச் சேர்ந்த நந்தினி என்ற பெண் ஆதங்கப்பட்டார்.

இதனிடையே, நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த நாகை மீனவர்கள் 12 பேரை இலங்கைக் கடற்படை செவ்வாய்க்கிழமை (நவம்பர் 12) கைதுசெய்துள்ளதாகத் தமிழக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்வாண்டில் மட்டும் இலங்கைக் கடற்படை இதுவரை 485 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கைதுசெய்துள்ளதாகவும் அவர்களின் 65 படகுகளைப் பறிமுதல் செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக மீன்பிடிப்பது தடுக்கப்படும் என்று இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here