ஐப்பசி பெளர்ணமி, சிவ பெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபடும் நாள் என்பதாலும், சந்திரனின் முழுமையான சாபம் நீங்கிய நாள் என்பதால் மிகவும் சிறப்புக்குரிய நாளாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு ஐப்பசி பெளர்ணமி நவம்பர் 15ம் தேதி வருகிறது. இது ஐப்பசி மாதத்தின் நிறைவு நாளாகவும் இந்த ஆண்டு அமைந்துள்ளது. மங்கலகரமான வெள்ளிக்கிழமையில் வரும் ஐப்பசி பெளர்ணமி அன்று இறையருளை பெறுவதுடன், குறிப்பிட்ட 7 பொருட்களை தானமாக வழங்கினால் வாழ்க்கையில் அள்ள அள்ள குறையாத செல்வ வளமும், வெற்றிகளும், அனைத்து விதமான நன்மைகளும் தேடி வந்து கொண்டே இருக்கும்.
ஐப்பசி பெளர்ணமி அன்று புனித நீர் நிலைகளில் ஸ்நானம் செய்வதும், தானம் செய்வதும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இது சிவனுக்கும், பெருமாளுக்கும் உரிய நாள் என்பதால் இந்த நாளில் கொடுக்கப்படும் தானங்கள் அளவில்லாத அதிர்ஷ்டத்தை தேடி தரும். ஐப்பசி அன்னாபிஷேகம் நடைபெறும் நாளில் எந்தெந்த பொருட்களை தானம் அளித்தால் அதிர்ஷ்டமும், வெற்றியும் நம்முடைய வீட்டுக் கதவை தட்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம். இவற்றில் முடிந்த பொருட்களை தானமாக அளிக்கலாம்.
உணவு :
அன்னத்திற்கு வழிபாட்டில் பிரதான இடம் தரப்படும் ஐப்பசி பெளர்ணமி நாளில் உணவை தானமாக அளிப்பது சிறந்தது. இந்த நாளில் பசியுடன் இருப்பவர்களுக்கு உணவை தானமாக அளிப்பதால் வாழ்க்கையில் எப்போதும் உணவு தட்டுப்பாடு என்பது ஏற்படாது. உணவு, தானியங்கள் ஆகியவற்றை ஏழைகளுக்கும், கோவில்களுக்கும் தானமாக கொடுக்கலாம். பெளர்ணமி தினத்தில் சந்தினுக்குரிய அரிசியால் செய்யப்பட்ட அன்னத்தை தானமாக கொடுப்பதும், தானங்களில் உயர்ந்த தானமாக கருதப்படும் அன்னதானம் செய்வதாலும் மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
உடை :
வஸ்திர தானம் எனப்படும் உடைகளை தானமாக அளிப்பது அளவில்லாத நன்மைகளை நமக்கு தரும். ஒருவரின் மானத்தை காக்கும் உடையை தானமாக அளிப்பதால் நம்முடைய கடந்த காலங்களில் செய்த பாவங்கள் தீரும். ஆன்மிக பலமும், இறையருளும் அதிகரிக்கும். இது செல்வ வளத்தையும் அதிகரிக்க செய்யும். ஏழைகளுக்கு உடையை தானமாக ்ளிப்பதால் வறுமை, துன்பம் ஆகியவற்றில் இருந்து நாம் விடுபட முடியும்.
நெய் :
நெய் அல்லது எண்ணெய் என்பது ஆன்மாவோடு தொடர்புடையதாகும். அதனால் இவற்றை தானமாக அளிப்பதால் மனம் தெளிவடையும். மன நிம்மதி ஏற்படும். ஞானம், செல்வ வளம் கிடைக்கும். நெய் மிகவும் புனிதமான பொருளாக கருதப்படுவது. இது அனைத்து தெய்வங்களுக்கும் உரியது என்பதால், கோவில்களில் விளக்கேற்ற நெய் அல்லது எண்ணெய், கோவில் அன்னதானத்திற்கு எண்ணெய் ஆகியவற்றை வாங்கிக் கொடுக்கலாம். இது நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுளை நமக்கு தரும்.
பசுக்கள் :
கோ தானம் எனப்படும் பசுவை தானமாக அளிப்பது அல்லது கோ சாலைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பது, பசுக்களை பராமரிக்க உதவுவது ஆகியவற்றை செய்வதால் மகாலட்சுமியின் அருட் கடாட்சம் கிடைக்கும். தானங்களில் உயர்ந்த தானமாகவும், பல பிறவிகளுக்கு பலன் தரக் கூடிய தானமாக கருதப்படுவது கோ தானமாகும். கோ சாலைகளுக்கு பராமரிக்க உதவினாலும் கூட குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி அதிகரிக்கும். எதற்கும் பற்றாக்குறை என்ற நிலை ஏற்படாது.
வித்யா தானம் :
கல்வியை தானமாக கொடுப்பது மிகப் பெரிய புண்ணிய பலனை தரும். நமக்கு தெரிந்த விஷயங்களை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்கலாம். ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக பாடம் சொல்லி கொடுக்கலாம். ஏழை குழந்தைகளின் படிப்பிற்க தேவையான புத்தகம், பேனா போன்ற பொருட்கள் ஆகியவற்றை வாங்கிக் கொடுப்பதால் நம்முடைய ஞானம் பெருகும். மோட்சம் கிடைக்கும். நலிவடைந்த பள்ளிகளுக்கும் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம்.
தீப தானம் :
ஒரு விளக்கில் எண்ணெய் நிரப்பி அவற்றை தானமாக வழங்கலாம். இது நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் இருளை போக்கும். செல்வ நிலையை உயர்த்தும். இறைவனின் அருளை பெற்றுத் தரும். கோவிலுக்கும் விளக்குகள் வாங்கிக் கொடுக்கலாம். நெய் விளக்குகள் வாங்கிக் கொடுப்பது கூடுதல் சிறப்பான பலன்களை தரும்.