சனிபகவானை எப்படி வழிபட்டால் நன்மை கிடைக்கும் ?

நவகிரகங்களில் மந்த கிரகம் என்றும், நீதி தேவன் என்றும் அழைப்படுபவர் சனி பகவான். யாராக இருந்தாலும் அவர்களுக்கு பாரபட்சம் பார்க்காமல் அவர்கள் செய்த நன்மை, தீமைகளின் அடிப்படையில் பலன்களை வழங்கக் கூடியவர். காகத்தை வாகனமாகக் கொண்ட சனி பகவான், சூரிய பகவானின் மகன் என சொல்லப்படுகிறது. மற்ற தெய்வங்களை போல் இல்லாமல் சனி பகவானை வழிபடுவதற்கு தனியான முறைகள், சில கட்டுப்பாடுகளும் உண்டு.

சனி எந்த அளவிற்கு கஷ்டத்தை கொடுப்பாரோ, அதே அளவிற்கு அள்ளியும் கொடுப்பார். சனியின் அருள் பார்வை பட்டால் பிச்சைக்காரர் கூட அரசனாகி விட முடியும் என்பார்கள். அப்படிப்பட்ட வல்லமை படைத்த சனி பகவானை எப்படி வழிபட்டால் நன்மை நடக்கும், அவரை வழிபடும் என்ன, அவருடைய அருளை பெறுவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

நவகிரகங்களில் ஒன்றாக விளங்கும் சனிபகவானை ஆயுள்காரகன் என்று ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகிறது. அவரது ஆதிக்கத்தை பொருத்தே ஆயுட்காலம் அமையும். “சனீஸ்வரனைப் போல் கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை” என்பது ஜோதிடப் பழமொழி. அதனால் சனி பகவானிடம் அனைவருக்கும் சற்று பயம் உண்டு. தெய்வங்களும் கூட சில சமயங்களில் சனி பகவானிடம் மாட்டிக் கொண்டு பெரும் துன்பங்களை அனுபவித்ததாக புராணக் கதைகள் சொல்வதுண்டு. ஒவ்வொருவரையும் அவர்களின் வாழ்நாளில் ஏழரை ஆண்டுகள் கண்டிப்பாக சனி பகவான் பிடித்து, அவர்களுக்கு வாழ்க்கையை புரிய வைத்து, பிறகு நன்மைகளை வாரி வழங்குவார்.

அவரவர் ராசிகளில் சனீஸ்வரன் சஞ்சரிக்கும்போது பல கஷ்டங்களையும், நஷ்டங்களையும் தந்து துன்பப்படுத்தி, பிறகு அந்த ராசியை விட்டு அடுத்த ராசிக்கு செல்லும்போது நஷ்டங்களை ஈடுசெய்யும் வகையில் மகிழ்ச்சியை கொடுத்து விட்டு செல்வார் என்பது ஐதீகம். சனி தோஷம் உள்ளவர்கள் தோஷ நிவர்த்தி செய்வதால், சனீஸ்வரன் மகிழ்வுற்று தாக்கங்களை குறைத்து பல நன்மைகளை தருவார்.

இவற்றுள் ஏழரைச் சனி காலம் மிகவும் கஷ்டமான காலமாகும். இந்த சமயத்தில் சனியின் பாதிப்பை குறைப்பதற்காக சனி பகவானுக்கு விருப்பமான விஷயங்களை செய்வதால் சனியால் ஏற்படும் கஷ்டங்கள் குறையும்.

* சனிக்கிழமையன்று காலையில் குளித்துவிட்டு, வீட்டில் பூஜை செய்து, காலை மற்றும் மதிய வேளைகளில் எந்த உணவு வகைகளும் உண்ணாமல் பால், பழம், தண்ணீர் மட்டும் சாப்பிட்டு விரதம் மேற்கொள்ள வேண்டும்.

* மாலையில் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். பிறகு இரவு வேளை மட்டும் ஏதேனும் ஒரு எளிமையான உணவை சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

* அதோடு சனிக்கிழமைகளில் மாலை நேரத்தில் கோயிலுக்கு சென்று, சனிபகவானுக்கு கருப்பு வஸ்திரம் சாற்றி, கருப்பு எள் மற்றும் வேகவைத்த சாதம் இவற்றை படைத்து, தீபமேற்றி வழிபட்டு வந்தால் நற்பலன்கள் கிடைக்கும்.

* சனிக்கிழமை விரதம் எல்லா மாதங்களிலும் கடைபிடிக்கலாம். சகல செல்வமும் பெற்று ஒருவர் வாழ வேண்டும் என்றால் சனிக்கிழமைகளில் விரதத்தை கடைபிடிக்க வேண்டும்.

சனிக்கிழமைதோறும் நவகிரகம் சுற்றும் பழக்கம் உள்ளவர்கள், சனீஸ்வரனை நேருக்கு நேர் நின்று வழிபடாமல் சன்னதியின் பக்கவாட்டில் நின்று வழிபடலாம். இவ்வாறு வழிபட்டால் சனிபகவானின் கெடு பார்வையால் நமக்கு எந்தவித தீங்கும் ஏற்படாது. மேலும் ஏழரை சனி, பாதச் சனி, ஜென்ம சனி, அஷ்டம சனி நடைபெறும் பட்சத்தில், பாதிக்கப்பட்டவர்கள் சனிபகவானை 27 முறை வலம் வந்து, எள் விளக்கு ஏற்றி வந்தால் சனிபகவானின் தாக்கம் குறைந்து ஆபத்துகள் விலகும் என்பது ஐதீகம். காகத்திற்கு தினசரி உணவு வைப்பதும், குறிப்பாக எள் கலந்த சாதத்தை உணவாக வைப்பதும் சனி தோஷத்தை போக்கும். சனி பகவானை எப்போதும் விழுந்து வணங்கக் கூடாது.

சனிக்கிழமை விரதத்தின் பலன்கள் :

சகல செல்வமும் கிடைக்கும், சனி தோஷத்தால் ஏற்படும் துன்பத்தின் தாக்கம் குறையும், திருமணத்தடை நீங்கும், தோஷங்கள் மற்றும் கர்ம வினைகள் குறையும், பாவங்கள் நீங்கி நீண்ட ஆயுள் கிடைக்கும்.

சனி பகவானுக்குரிய தானியமான எள், இரும்பு ஆகியவற்றை சனிக்கிழமைகளில் தானம் கொடுப்பதால் சனி பகவான் மனம் மகிழ்ந்து நமக்கு நன்மைகளை அருள்வார் என்பது நம்பிக்கை. அதே போல் சாலையோரம் வசிப்பவர்கள், மாற்று திறனாளிகள் ஆகியோருக்கு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தாலும் சனீஸ்வர பகவான் மனம் மகிழ்வார். சாலையோரம் வசிப்பவர்கள், யாசகம் பெற்று வாழ்பவர்கள் ஆகியோருக்கு கருப்பு நிற குடை, போர்வை, விசிறி ஆகியவற்றையும் தானமாக கொடுக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here