தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

நடிகர் விஜயகாந்த் மற்றும் தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பழைய குற்றவாளியை போலீசார் சைபர் க்ரைம் உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர். சென்னை எழும்பூரில் மாநில காவல் கட்டுப்பட்டு அறை இயங்கி வருகிறது. நேற்று மதியம் 12.56 மணிக்கு கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அழைப்பை காவலர் ஒருவர் எடுத்து பேசினார். அப்போது, எதிர்முனையில் பேசிய மர்ம நபர் ஒருவர் ‘ நடிகர் விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்து இருப்பதாகவும், இன்னும் சற்று நேரத்தில் அது வெடித்து சிதறும்’ என்று கூறி இணைப்பை துண்டித்தார். அதேபோல பிற்பகல்.2.30 மணிக்கு நடிகர் தனுஷ் வீட்டிலும் வெடிகுண்டு வைத்திருப்பதாக எதிர்முனையில் பேசிய நபர் போனை துண்டித்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த காவலர் உடனே உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதன்படி சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் வீட்டிலும், ஆழ்வார்பேட்டை வெங்கடேஸ்வரா அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நடிகர் தனுஷ் வீட்டிலும் வெடி குண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர். ஒரு மணி நேரம் நடந்த இந்த சோதனையில் அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. அதைதொடர்ந்து விருகம்பாக்கம் போலீசார் நடிகர் விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் நடிகர் தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து அபிராமபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர் பேசிய செல்போன் எண்ணை வைத்து சைபர் க்ரைம் துறை உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் நடிகர் விஜயகாந்த் மற்றும் தனுஷ் வீட்டின் அருகே பதற்றம் நிலவியது.

இந்நிலையில் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை சேர்ந்த புவனேஷ் (22) என்பது தெரியவந்தது. இவர் ஏற்கனவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, நடிகர் சூர்யா, அஜீத், விஜய் ஆகியோருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக இவரை போலீசார் எச்சரித்தும் கைது செய்தும் உள்ளனர். இந்நிலையில் அவர், நடிகர் விஜயகாந்த் மற்றும் நடிகர் தனுஷ் வீட்டிற்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் சினிமா வட்டாராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து புவனேஷை மனநல மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here