மணிப்பூரில் கடந்த வாரம் முதல் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களால் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த நவம்பர் 7 ஆம் தேதி ஜிர்பாம் மாவட்டத்தில் ஆசிரியை எரித்துக் கொல்லப்பட்டார். தொடர்ந்து கடந்த திங்கள்கிழமை தலைநகர் இம்பாலில் இருந்து 220 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜிர்பாம் மாவட்டத்தின் போரோபெக்ரா பகுதியில் மெய்தேய் சமூகத்தைச் 2 முதியவர்கள் உயிருடன் எரிக்கப்பட்டனர். 6 பேரை குக்கி கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர்.
அவர்கள் 6 பெரும் அவர்களால் கொலை செய்யப்பட்டதை அரசுத் தரப்பு அதிகாரிகள் நேற்று உறுதி செய்தனர். கடத்தப்பட்டவர்கள், நிவாரண முகாமில் தங்கியிருந்த லைசாராம் ஹெரோஜித் என்பவரது குடும்பத்தினர் ஆவர். அவரது 2 குழந்தை, மனைவி, மாமியார், மனைவியின் சகோதரியும் அவரது மகளும் கடத்தப்பட்ட 6 பேர் ஆவர். மணிப்பூர் அசாம் எல்லைப்பகுதிக்கு இவர்கள் கடத்தப்பட்டனர். கடத்தப்பட்டவர்களில் மூன்று பேரின் உடல்கள் கடந்த வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. அது லைசாராமின் 8 மாத குழந்தை, அவரது மனைவியின் சகோதரியும் அவரது 8 வயது மகள் ஆகியோரது உடல்கள் ஆகும். லைசாராம் மனைவியின் உடல் இன்னும் தேடப்பட்டு வருகிறது. கொல்லப்பட்டது தனது குடும்பத்தினர் தான் என லைசாராம் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் தலை இல்லாத 2 வயது குழந்தை மற்றும் அரை நிர்வாணமாக அழுகிய நிலையில் மூதாட்டி [லைசாராம் மாமியார்] உடல்கள் ஜிர்பாம் அருகில் உள்ள ஆற்றில் மிதந்தன என்று போலீஸ் இன்று தெரிவித்துள்ளது. லைஸாராம் 2 வயது குழந்தையின் தலை இல்லாத உடல் உடைந்த மரக்கிளைகளில் குத்தி வைக்கப்பட்ட நிலையில் ஆற்றில் மிதந்ததாக நேரில் கண்டவர்கள் கூறியதாக என்டிடிவி களத் தகவல்கள் கூறுகின்றன. குழந்தைகியின் கைகள் உடலில் இருந்து தொலைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் 6 பேரும் கொல்லப்பட்ட செய்தி நேற்று மணிப்பூர் பள்ளத்தாக்கு முழுவதும் பரவியதால் போராட்டங்கள் வெடித்துள்ளன. முதலமைச்சர் வீடு முற்றுகை இடப்பட்டது. 2 அமைச்சர்கள், பாஜக எம்எல்ஏக்கள் 3 பேரின் வீடுகள் சூறையாடப்பட்டன. 5 மாவட்டங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.