சாப்பாட்டில் ஏற்பட்ட தகராறில் பெற்ற தாயை மகன் பாத்திரத்தால் தலையில் அடித்து கொலை செய்த் சம்பவம் நிகழ்ந்துள்ளது. குஜராத் மாநிலம் சூரத் நகரில் உத்னா-மக்தல்லா சாலையில் உள்ள பஞ்சஷீல் நகரில் வசித்து வரும் காந்தி பிஸ்வால் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் ஜவுளி தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளனர். இவர்கள் ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
காந்தியின் 85 வயது தாய் தனது மகனுடன் தங்குவதற்காக ஆறு மாதங்களுக்கு முன்பு இங்கு வந்துள்ளார். மகனும் மருமகளும் வேலைக்கு செல்லும் நிலையில் தாய் வீட்டில் சமையல் வேலைகளை செய்து வந்துள்ளார். உணவு விஷயத்தில் அடிக்கடி தனது தாயுடன் மகன் காந்தி தகராறு செய்துள்ளார்.
இந்நிலையில் மனைவி வீட்டில் இல்லாத சமயத்தில் தாயுடன் உணவு தொடர்பாக வாக்குவாதம் செய்த காந்தி கோபத்தில் மசாலா பொடிக்கும் சிறிய அளவிலான அம்மி உரலை எடுத்து தாயின் தலையில் பலமாக அடித்துள்ளார். இதில் அவரது தலையில் இருந்து ரத்தம் கொட்டியுள்ளது.
தாயார் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த காந்தி வீட்டை விட்டு ஓடியுள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தினர் மூதாட்டியின் நிலையை பார்த்து கதோதரா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனைத்தொடர்ந்து போலீஸார் தப்பிச் சென்ற காந்தியை கைது செய்தனர். மூதாட்டியின் உடலை போலீஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காந்தியிடம் விசாரணை நடத்தி வருவதாக சூரத் டிசிபி விஜய்சிங் குஜ்ஜார் தெரிவித்தார்.