கோலாலம்பூர்:
15 வயது சிறுமி கடத்தப்பட்டது தொடர்பில் இரண்டு பெண்கள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளதுடன், கடத்தல்காரர்களிடமிருந்து குறித்த சிறுமியை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
தென் கிள்ளான் மாவட்ட காவல்துறை தலைவர் துணை ஆணையர் சா ஹூங் ஃபோங் கூறினார்.
கடத்தப்பட்ட சிறுமியின் தந்தை கடந்த நவம்பர் 18 அன்று மகளின் தொலைபேசியில் இருந்து ஆபத்தில் சிக்கிய மகளின் செய்தியைப் பெற்றதையடுத்து, அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
“தனது மகள் அதே தினத்தன்று (நவம்பர் 18) மாலை 4 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறினார் என்று, மாலை 6.30 மணி ஆகியும் அவர் வீடு திரும்பாததால் அவரது தந்தை மகளை தொடர்பு கொள்ள முயன்றார்.
“அவர் மகளை அழைக்க முயற்சித்தபோது, சுபாங்கில் உள்ள ஒரு இடத்திலிருந்து அவளை அழைத்து வரும்படி ஒரு குரல் செய்தி வந்தது, அப்போது அவர் ஒரு ஆணுடன் தகராறில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார் ” என்று அவர் கூறினார்.
எவ்வாறாயினும், தந்தை இடத்திற்குச் சென்றபோது, வாலிபரோ அல்லது அவரது மகளோ அங்கு இல்லை என்று ஏசிபி சா கூறினார்.
“ஆனாலும் பாதிக்கப்பட்ட சிறுமி கோலாலம்பூரிலுள்ள எதோ ஒரு இடத்தில் விடுவிக்கப்பட்டதாக அவருக்கு வாட்ஸ்அப் மூலம் மற்றொரு செய்தி வந்தது,” என்று அவர் கூறினார்.
இந்நிலையில் ஷா ஆலம், ஐ-சிட்டியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இரவு 11 மணியளவில் கடத்தல்காரர்களை போலீசார் கண்டுபிடித்தனர். அங்கு 15 முதல் 19 வயதுடைய மூன்று ஆண்களையும் இரண்டு பெண்களையும் போலீசார் கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, கோலாலம்பூரில் உள்ள மிட் வேலி மெகாமால் அருகே இரண்டாவது சோதனை நடத்தப்பட்டது, அதில் 16 மற்றும் 18 வயதுடைய மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர் என்று அவர் சொன்னார்.
கைது செய்யப்பட்டவர்களில் எவருக்கும் முந்தைய குற்றவியல் பதிவு இல்லை, அதே சமயம் அவர்கள் அனைவரும் விசாரணைகளுக்கு உதவுவதற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.











