கோலாலம்பூர்:
அடுத்த ஆண்டு நடுப்பகுதியில், கிட்டத்தட்ட ஒன்பது மில்லியன் மலேசியத் தொழிலாளர்கள் 24 மணிநேர சமூகப் பாதுகாப்பினை அனுபவிக்க முடியும் என்று PERKESO தெரிவித்த்துள்ளது.
PERKESO -வின் பணியிட பாதுகாப்பு திட்டம் தற்போது ஊழியர்களை அவர்களின் பணியின் போது பாதுகாக்கிறது, இதனை 24 மணிநேரத்திற்கும் பாதுகாப்பு கொடுக்கும் ஒரு திட்டமாக விரிவுபடுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன என்றும், 24 மணி நேர பாதுகாப்பை வழங்குவதற்காக ஊழியர்களின் சமூகப் பாதுகாப்புச் சட்டத்தை அரசாங்கம் திருத்த விரும்புகிறது,” என்றும் PERKESO -வின் திட்டமிடல் பிரிவு துணை தலைமை நிர்வாகி எட்மண்ட் சியோங் கூறினார்.
சட்டத்தின் திருத்தத்திற்குப் பிறகு PERKESO அனைத்து விபத்துக்களுக்கும், வேலை சம்பந்தமில்லாத, வேலை நேரத்திற்கு வெளியே நிகழும் விபத்துக்களுக்கும் பாதுகாப்பை வழங்கும் என்றும், அதற்கு அமைவாக சடடத்திருத்தம் மேற்கொள்ளப்படும் என்றும், குறிப்பாக வெளிநாட்டுப் பயணங்களில் காயமடைந்த மலேசியத் தொழிலாளர்களையும் இது உள்ளடக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.
மேலும் “நாட்டில் உள்ள 95 சதவீதத்திற்கும் அதிகமான நிறுவனங்கள் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) ஆகும், மேலும் அவர்களால் தங்கள் தொழிலாளர்களுக்கு காப்பீட்டு சலுகைகளை வழங்க முடியாமல் போகலாம்.” எனவே சட்டம் திருத்தப்பட்டவுடன், PERKESO அனைத்து விபத்துக்களுக்கும் அவை வேலை தொடர்பானதா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் 24 மணி நேர பாதுகாப்பை வழங்கும் என்று அவர் சொன்னார்.









