பெரும்பாலானோர் புது இடங்களைப் பார்க்க வேண்டும், பயணங்கள் செய்ய வேண்டும் என்று விருப்பம் கொண்டிருப்பர். ஆனால் வீடு, பொறுப்பு, வேலை என பலவிதமான கண்ணுக்குத் தெரியாத சங்கிலிகளால் அவர்கள் கட்டுண்டு கிடக்கிறார்கள்.
வேலையிடம் – வீடு என இந்த இடைப்பட்ட அளவு மட்டுமே அந்த சங்கிலியின் நீளம் இருக்கும். எனவே புது இடங்களுக்கு பயணித்து அதை வீடியோவாக எடுத்து யூடியூபில் பதிவிடுபவர்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது. இவ்வாறு புது இடங்களுக்கு பயணம் செய்து வீடியோ பதிவு செய்வோர் VLOGGER என்று அழைக்கப்படுகின்றனர்.
அந்த வகையில்,On Road Indian என்ற யூசர் நேம் கொண்ட யுடியூபர் ஒருவர் ஈரானுக்கு பயணப்பட்டுள்ளார்.அங்கு என்ன ஏது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த அவருக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் ஒருவர் உதவி செய்துள்ளார்.
ஈரான் விமான நிலையத்தில் வந்திறங்கிய அந்த இந்திய யுடியூபர் விமான நிலையத்தில் வைத்து ஹுசைன் என்ற பாகிஸ்தானிய இளைஞனை சந்தித்துள்ளார். இவர் ஈரானில் பயின்று வரும் மாணவர் ஆவார். இந்தியரின் செல்போனில் நெட்வொர்க் பிரச்சனை இருந்துள்ளது. எனவே அதற்கு தீர்வுகாண ஹுசைன் முன்வந்துள்ளார். இந்தியரை டாக்சி மூலம் தனது வீட்டுக்கு ஹுசைன் அழைத்து சென்றார்.
இந்தியர் கீழே இருக்க ஹுசைன் மாடிக்கு சென்றபோது, தனது வீடியோவில் தனக்கு ஏற்பட்ட நிலைமை குறித்து தனது கவலையை தெரிவித்தார்.
ஆனாலும் இந்தியருக்கு நெட்வொர்க் கிடைக்கும் சிம்கார்டை வழங்க ஹுசைன் தனது வீட்டில் சிரமம் எடுத்து தேடுவதும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இந்தியரின் நெட்வொர்க் பிரச்சனையை ஹுசைன் கடைசியாக தீர்த்து வைத்தார். அதன்பின் இந்தியர் ஈரானில் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிப் பார்க்கிறார்.
இது அனைத்தும் வீடியோ ஆக்கப்பட்டு அவர் இதை வெளியிடவே, YouTube இல் ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. மேலும் பிற சமூக ஊடங்களிலும் வைரலாகி வருகிறது.பொதுவாகவே பாகிஸ்தானியர்கள் ஆபத்தானவர்கள், அவர்கள் இந்தியர்களின் எதிரிகள் என இந்திய சினிமாக்களும் அரசியல்வாதிகளும் மக்கள் மத்தியில் பொதுப்படையான பிம்பத்தை ஏற்படுத்தி வைத்திருந்தாலும், இது போன்ற சம்பவங்கள் அது வடிகட்டிய பொய் என்பதை நிரூபிக்கத் தவறுவதில்லை என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.