கோலாலம்பூர்:
செராஸில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் தைவான் நாட்டைச் சேர்ந்த யூடியூபரைத் தாக்கி கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக நான்கு பெண்கள் உட்பட 12 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி ஜப்பானிய நபர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கோலாலம்பூர் போலீஸ் கமிஷனர் டத்தோ ஃபாதில் மார்சுஸ் தெரிவித்துள்ளார்.
இந்தக் கொள்ளைச் சம்பவத்தில், தாக்குதலுக்கு உள்ளான தைவானைச் சேர்ந்த யூடியூபர், காயமடைந்ததுடன், அவருக்கு RM35,000 மதிப்பிலான இழப்பு ஏற்பட்டுள்ளது. அவரிடம் அதிக அளவிலான வெளிநாட்டு ரொக்கப் பணம் இருப்பதை அறிந்த பின்னரே இக்கும்பல் இத்திட்டத்தைத் தீட்டித் தாக்குதல் நடத்தியுள்ளது.
புகாரைத் தொடர்ந்து, செராஸ் மாவட்டக் குற்றவியல் விசாரணைப் பிரிவும் கோலாலம்பூர் குற்றவியல் விசாரணைப் பிரிவும் இணைந்து சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மற்றும் கோலாலம்பூரில் நடத்திய சிறப்பு நடவடிக்கைகளில் 26 முதல் 48 வயதுடைய 8 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்களில் 7 பேர் வாக்குமூலம் அளிக்கப்பட்ட பின் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், 5 சந்தேகநபர்கள் ஆகஸ்ட் 13 வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து குற்றவியல் சட்டம் பிரிவு 170 (அரசு அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்தல்) மற்றும் பிரிவு 395 (கூட்டுக் கொள்ளை) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள மற்றொரு சந்தேகநபரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
























