பெய்ரூட்,இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் ஓராண்டுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்தப்போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா உள்ளது. லெபனானில் இயங்கி வரும் இந்த ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு ஈரான் ஆதரவாக உள்ளது. இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதில் லெபனானில் 3,800-க்கும் அதிகமானோர் கொன்று குவிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். 12 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம் பெயர்ந்தனர். இந்த சூழலில் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய இருநாடுகளும் எடுத்த முயற்சியின் பலனாக இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தம் கடந்த 27-ஆம் தேதி அமலுக்கு வந்தது.
இந்த நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்த தயாராக இருந்ததாகவும் இதனால், தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேல் கூறியது. ஆனால் அதை திட்டவட்டமாக மறுத்த ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் வேண்டுமென்றே போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளனர்.