செம்பனைத் தோட்டத்தில் ரகசியமாக இயங்கும் பழைய இரும்புக் கிடங்கு: டெங்கி அச்சுறுத்தலில் பொதுமக்கள்!

குளுவாங்:

குளுவாங், தாமான் மாதாஹாரி சத்து மற்றும் தாமான் இண்டா ஜெயா பகுதிவாசிகளின் நிம்மதி நீண்டகாலத்திற்கு நீடிக்கவில்லை.

முன்னர் புகார்கள் காரணமாக மூடப்பட்ட கோழி பதப்படுத்தும் கூடம், தற்போது ரகசியமாகப் பழைய இரும்புகள் மற்றும் கழிவுகளைச் சேகரிக்கும் இடமாக மாற்றப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

குடியிருப்புப் பகுதிகளிலிருந்து வெறும் 50 மீட்டர் தொலைவில், செம்பனைத் தோட்டத்தில் அமைந்துள்ள இந்த இடத்தால் தங்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புப் பாதிக்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

60 வயதுடைய ஷரீஃபா என்ற குடியிருப்பாளர் கூறுகையில், “முன்னர் கோழிக்கூடத்திலிருந்து வந்த துர்நாற்றம் இப்போது இல்லை என்றாலும், இங்குச் சேர்க்கப்படும் கழிவுப்பொருட்களில் மழைநீர் தேங்கி ஏடிஸ் (Aedes) கொசுக்கள் உற்பத்தியாகும் அபாயம் உள்ளது. குளுவாங் பகுதியில் தற்போது டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் வேளையில் இது கவலையளிக்கிறது” என்றார்.

பிற பழைய இரும்புக் கடைகளைப் போல இதற்கு எந்தவொரு அதிகாரப்பூர்வப் பெயர் பலகையோ அல்லது உரிமச் சான்றிதழோ இல்லை. எனவே இது சட்டவிரோதமாக இயங்குகிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ரோஸ்லி முகமட் (40) என்பவர் கூறுகையில், பகல் நேரங்களில் அந்த இடத்தில் எந்தவொரு வாகன நடமாட்டமும் காணப்படுவதில்லை என்றும், எப்போது கழிவுப்பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன என்பதே தெரியவில்லை என்றும் கூறினார்.

குடியிருப்புப் பகுதிக்கு அருகில் இயங்கும் இந்த பழைய இரும்புக் கிடங்கு குறித்து சம்பந்தப்பட்ட நகராட்சி மன்ற அதிகாரிகளும் சட்ட அமலாக்கத் துறையினரும் உடனடியாக களத்தில் இறங்கி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-Kosmo-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here