கோலாலம்பூர்:
பொதுப்போக்குவரத்து ரயில் நிலையம் ஒன்றில் சக்கர நாற்காலியில் இருந்த மாற்றுத்திறனாளி ஒருவர் மின்தூக்கியைப் பயன்படுத்த முடியாமல் தவித்ததாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என எக்ஸ்பிரஸ் ரயில் லிங்க் (ERL) நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அந்நிறுவனம், சம்பந்தப்பட்ட பயணி தனது வருகை மற்றும் உதவி குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவித்திருந்ததாகக் கூறியுள்ளது.
அவர் ரயிலில் இருந்து பாதுகாப்பாக இறங்குவதற்குப் பாதுகாப்புப் பணியாளர்கள் உதவியதாகவும், அந்த நேரத்தில் பயன்படுத்தப்பட்ட சாய்தளப் பலகையைப் பணியாளர் எடுத்து வைக்கும் போது எடுக்கப்பட்ட படம் தவறான சூழலில் பகிரப்பட்டுள்ளதாகவும் தெளிவுபடுத்தப்பட்டது.
அனைத்துப் பயணிகளுக்கும் பாதுகாப்பான, வசதியான மற்றும் தடையற்ற பயண அனுபவத்தை வழங்குவதே தங்களின் முதன்மையான நோக்கம் என்று குறிப்பிட்ட இ.ஆர்.எல்., மாற்றுத்திறனாளிகளுக்கும், முதியவர்களுக்கும் உதவ தங்களது பணியாளர்கள் எப்போதும் தயார் நிலையில் இருப்பதாகவும், நிலையங்களுக்கிடையே உரிய வழிகாட்டுதல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
























