பாங்காக்: ரஷ்ய நடிகை கமிலா பெல்யட்ஸ்கயா, 24, தாய்லாந்து கடற்கரையில் யோகா பயிற்சி செய்தபோது, ராட்சத அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
ரஷ்ய நடிகையான கமிலா பெல்யட்ஸ்கயா, தனது காதலனுடன் விடுமுறையைக் கொண்டாட தாய்லாந்து சென்றிருந்தார். அங்குள்ள கோ சாமுய் கடற்கரையில், லாட் கோ வியூ பாயின்ட்டுக்கு சென்று யோகா செய்தார்.அவர் யோகா செய்து கொண்டிருந்தபோது, ராட்சத அலை எழும்பி, அவரை கடலுக்குள் இழுத்துச் சென்றது.சம்பவம் நடக்கும்போது அவருடன் அவருடைய ஆண் நண்பரும், வேறு சிலரும் அருகில் இருந்துள்ளனர்.
ஆனாலும் அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. கமிலா யோகா பயிற்சி செய்தபோது, ராட்சத அலை அவரை இழுத்துக் கொண்டு செல்லும் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் பரவலாக பரவி வருகிறது.அவருடைய உடல் சிறிது துாரம் இழுத்துச் செல்லப்பட்டு, அதன் பின்னர் தேடி கண்டுபிடிக்கப்பட்டதாக தாய்லாந்து சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.