சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் முதல் அலையின் போது மீட்புப் பணிகளில் இடையூறு ஏற்படுத்திய வெள்ளம் தொடர்பான போலி அழைப்புகள் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்குவார்கள். தகவல்தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1998 இன் பிரிவு 233 இன் கீழ் விசாரணை நடத்தப்படும் என்று துணை போலீஸ் படைத்தலைவர் அயோப் கான் மைடின் பிச்சை தெரிவித்தார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 50,000 ரிங்கிட் அபராதம் அல்லது ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். தற்போது வெள்ள நிவாரணப் பணிகளில் கவனம் செலுத்துவோம். அதன்பிறகு விசாரணையை தொடங்குவோம், என்றார்.
முதல் அலையின் போது பாசிர் மாஸ் போலீசாருக்கு வெள்ளம் தொடர்பான 114 போலி அழைப்புகள் வந்துள்ளதாக ஊடகங்கள் அண்மையில் செய்தி வெளியிட்டுள்ளன. கிளந்தான் காவல்துறைத் தலைவர் யூசோப் மாமத் கூறுகையில், அறிக்கையில் கூறப்பட்ட இடத்திற்கு பணியாளர்களை திரட்டியபோது, அந்த வீடுகள் இல்லை என்பதை கண்டறிந்தனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்ற மாநிலங்களிலும் இதுபோன்ற தவறான அழைப்புகள் வந்ததாக அயோப் கான் கூறினார். இதுபோன்ற புரளி அழைப்புகள் மீட்புக் குழுக்களின் பணியை சீர்குலைத்துவிட்டன. மேலும் இந்த பொறுப்பற்ற தரப்பினருக்கு எதிரான நடவடிக்கை அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் பாடமாக இருக்கும் என்றார் அவர்.