சபா மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் ஊழல் விவகாரத்தில் சிக்கியுள்ள விவகாரம் தற்போது நாட்டில் பல்வேறு வகையில் பேசப்பட்டு வரும் வேளையில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று அம்மாநில முதலமைச்சர் டத்தோஸ்ரீ ஹஜிஜி நூர் உட்பட இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்துப் பேசினார்.
நேற்றுக் காலை புத்ராஜெயாவில் இச்சந்திப்பு நடைபெற்றதை சபா மாநில நிதி அமைச்சர் மசிடி மன்ஜூன் நேற்று உறுதிப்படுத்தினார். இச்சந்திப்பின்போது பிரதமர் சபா மாநில முதலமைச்சர் டத்தோஸ்ரீ ஹஜிஜி நூர், அம்மாநில நிதி அமைச்சர் மசிடி மன்ஜூன், அம்மாநில அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்கத்துறை அமைச்சர் அரிஃபின் அரிஃப் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

சபா மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட வெளியான காணொளி சம்பந்தமாக இச்சந்திப்பு நடைபெற்றதா என அவரிடம் கேட்டபோது, இது சாதாரண சந்திப்பே எனவும் அவர் பதிலளித்தார். இச்சந்திப்பின்போது மத்திய அரசாங்கத்தின் சார்பில் மேலும் சிலர் கலந்து கொண்டதாகவும் அவர் சொன்னார்.
சபா மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் ஊழலில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட எட்டு சட்டமன்ற உறுப்பினர்களில் மசிடி மன்ஜூனும் அடங்குவார். எனினும், அவர் இக்குற்றச்சாட்டை மறுத்து வந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக காணொளி வெளியானத்தைத் தொடர்ந்து கடந்த 3.12.2024ஆம் தேதி மசிடி மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் அதிகாரிகளை சொந்தமாகச் சந்தித்து வாக்குமூலம் கொடுத்தார். கடந்த 11.1.2024ஆம் தேதி மசிடியின் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட அக்காணொளியில் அவர் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் 3 லட்சம் ரிங்கிட் ஊழல் குறித்து பேசியதாகவும் கூறப்படுகிறது.





















