இலங்கையில் போலீஸ்துறை தலைவராக நியமிக்கப்பட்ட தேசபந்து தென்னக்கோன் செயல்பட உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதால் அங்கு அதிபர் தேர்தல் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
போலீஸ்துறை ரலைவர் இல்லாமல் தேர்தலை நடத்த முடியாது என ஒரு தரப்பினர் கூறி வருகின்ற நிலையில், பதில் போலீஸ்துறை தலைவரின் கீழ் தேர்தலை நடத்த முடியும் என மற்றுமொரு தரப்பு தெரிவிக்கின்றது.
இலங்கையில் 2021ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை தடுத்து நிறுத்த முடியாமல் விட்டது தொடர்பில், தேசபந்து தென்னக்கோனிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு விசாரணைகளை நடாத்திய ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்திருந்தது மற்றும் அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்றில் உயர்நீதிமன்றம் அவரை குற்றவாளி என அறிவித்திருந்தது ஆகிய காரணங்களை முன்னிலைப்படுத்தி பல்வேறு தரப்பினர் அவரது நியமனத்திற்கு எதிராக குரல் எழுப்பியிருந்தனர்.
இந்த நிலையில், போலீஸ்துறை தலைவர் பதவிக்கு தேசபந்து தென்னக்கோனின் பெயர் அரசியலமைப்பு சபைக்கு பரிந்துரை செய்யப்பட்ட போதிலும், அவரது பெயர் தெரிவு செய்யப்பட்ட விதம் பாரிய சர்ச்சையை தோற்றுவித்திருந்தது.
அரசியலமைப்பு சபையில் 9 அங்கத்தவர்கள் அங்கம் வகிப்பதுடன், தீர்மானமொன்று நிறைவேற்றப்படும் போது அவர்களில் ஐந்து பேரின் அனுமதி அவசியம் என கூறப்படுகின்றது.
அரசியலமைப்பு சபையின் தலைவராக சபாநாயகர் செயற்படுவதுடன், தீர்மானமொன்று நிறைவேற்றப்படும் போது வாக்குகள் சமமாகும் பட்சத்தில் மாத்திரமே சபாநாயகரினால் தனது வாக்கை அளிக்க முடியும்.
இந்த நிலையில், போலீஸ்துறை தலைவர் தெரிவின் போது அரசியலமைப்பு சபையின் 4 பேர் தேசபந்து தென்னக்கோனிற்கு ஆதரவாகவும், இருவர் எதிராகவும் வாக்களித்திருந்ததுடன், எஞ்சிய இருவர் வாக்களிக்காதிருந்தனர்.
வாக்களிக்காத இருவரது வாக்குகளும் எதிராக அளிக்கப்பட்ட வாக்கு என கருதி, சபாநாயகர் தனது வாக்கை ஆதரவாக அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, தேசபந்து தென்னக்கோன்னை இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க போலீஸ்துறை தலைவர் நியமித்தார்.
இந்த செயற்பாடானது, அரசியலமைப்பை மீறிய செயற்பாடு என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டி வருகின்றன.



















