நாட்டிலுள்ள அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் சொத்துகளை அறிவித்து விட்டதாக தொடர்புத்துறை அமைச்சரும் ஒற்றுமை அரசாங்கத்தின் பேச்சாளருமான ஃபாமி ஃபட்ஸில் நேற்றுக் கூறினார்.
இதற்கு முன்பு தாமும் தனது சொத்துகளை அறிவித்திருந்ததாகவும் அவர் கூறினார். இந்நாட்டிலுள்ள சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் சொத்துகளை அறிவிக்க அரசாங்கம் கட்டாயப்படுத்த வேண்டும் என சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் சென் நேற்று வலியுறுத்தியதைத் தொடர்ந்து அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.

சொத்துகளை அறிவிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் நாட்டிலுள்ள அரசாங்க ஊழியர்களும் தங்களின் சொத்துகளை அறிவிக்க வேண்டும் என சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டுக் கொண்டது அவரின் சொந்தக் கருத்தாகும் என நேற்று லெம்பா பந்தாயில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நாட்டிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் சொத்துகளை அவசியம் அறிவிக்க வேண்டும் என்பதை அரசாங்கம் கட்டாயப்படுத்த வேண்டும் என கெஅடிலான் கட்சியைச் சேர்ந்த சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் நேற்று வலியுறுத்தி இருந்தார்.

நாட்டில் நீதிபதிகள் உட்பட அரசாங்க உயர் அதிகாரிகள், அமைச்சின் தலைமைச் செயலாளர்கள், துணைத் தலைமைச் செயலாளர்கள் ஆகியோர் ஏற்கெனவே தங்களின் சொத்துகளை அறிவித்திருந்ததாகவும் அவர் கூறினார்.
அதேவேளையில் அரசாங்க ஊழியர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களின் சொத்துகளை அவசியம் அறிவிக்க வேண்டும் என்ற விதிமுறை புதிய சம்பளத் திட்டத்திலும் உள்ளடங்கும் என கியூபெக்ஸ் பொதுச் செயலாளர் அப்துல் ரஹ்மான் முகமட் நோர்டின் நேற்றுக் கூறியிருந்தார்.





















